ரயில் நிலையத்தில் குயில் போன்று பாடிய மூதாட்டிக்கு ரூ. 55 லட்சம் வீடு கொடுத்த ஹீரோ
Recommended Video
மும்பை: ரயில் நிலையத்தில் குயில் போன்று பாடிய மூதாட்டிக்கு ரூ. 55 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை அன்பளிப்பாக அளித்துள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
மேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த மூதாட்டி 1972ம் ஆண்டு வெளியான ஷோர் படத்திற்காக லதா மங்கேஷ்கர் பாடிய ஏக் பியார் கா நக்மா ஹை என்கிற பாடலை அழகாக பாடினார். அவர் பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த மூதாட்டிக்குள் இப்படி ஒரு திறமையா என்று வியக்காதவர்களே இல்லை.

அந்த வீடியோவால் ஒரே நாளில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவர் பெயர் என்ன, தொடர்பு எண் என்ன என்று கேட்டு பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் போட்டனர். அந்த மூதாட்டியின் பெயர் ரணு மண்டல்.
ரணு மோண்டலின் வீடியோவை பார்த்தவர்கள் தற்போதும் ஒன்றும் காலதாமதமாகிவிடவில்லை அவருக்கு படங்களில் பாட்டு பாட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்கள். இந்நிலையில் பாலிவுட் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா ரணுவுக்கு தன் படத்தில் பாட்டு பாடும் வாய்ப்பு அளித்துள்ளார். அவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பாடலை அழகாக பாடியுள்ளார்.
ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பாட்டு பாடியதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த ரணுவுக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அதாவது ரணுவின் குரலை கேட்டு அசந்து போன சல்மான் கான் அவருக்கு ரூ. 55 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம்.
வீடு கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் தான் நடித்து வரும் தபாங் 3 படத்தில் ரணுவை பாட வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம். சல்மான் கானின் இந்த செயல் குறித்து அறிந்த அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.
திறமை இருந்தும் இப்படி உள்ளாரே என்று ரணுவை பார்த்து பாவப்பட்டவர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளத்தின் மகிமையால் ரணுவின் வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது.


Click it and Unblock the Notifications