சிரஞ்சீவியும், சல்மானும் இணைவது பிரபலமான இந்தப்பட ரீமேக்குக்கு தானாம்.. தரமான சம்பவம் இருக்கு!
ஹைதராபாத்: டோலிவுட்டின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இணைந்துள்ளார்.
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் காட் ஃபாதர்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த லூசிஃபர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீமேக் ஸ்டார்
மெகா ஸ்டார் பட்டத்துடன் வலம் வந்த நடிகர் சிரஞ்சீவியை சமீபத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவே ரீமேக் ஸ்டார் என கலாய்த்தார். மலையாள திரைப்படமான லூசிஃபர் படத்தை காட்ஃபாதர் எனும் பெயரிலும், கோலிவுட்டில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தை போலா சங்கர் எனும் பெயரிலும் ரீமேக் செய்து நடித்து வருகிறார் சிரஞ்சீவி.

லூசிஃபர் ரீமேக்
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் லூசிஃபர். இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் படமாக உருவான இந்த படத்தில் கேமியோ ரோலில் பிருத்விராஜ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் மோகன் ராஜா தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்.

மீண்டும் நயன்தாரா
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை நயன்தாரா நடிகர் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் மோகன் ராஜா இயக்கி வரும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடித்த பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

சல்மான் கான் ஆன்போர்ட்
இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கானுக்கு பூங்கொத்து கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து காட்ஃபாதர் படத்தில் சல்மான் கான் ஆன்போர்ட் ஆகியுள்ளதை அறிவித்துள்ளார்.

என்ன ரோல்
லூசிஃபர் படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் அந்த படத்தில் கேமியோவாக வந்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் இயக்குநர் மோகன் ராஜா வருவதற்கு பதிலாக பாலிவுட் நடிகர் சல்மான் கானை நடிக்க வைக்க உள்ளனர் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களும் இந்த படத்தில் கேமியோவாக வருவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினி நடித்தால்
தமிழில் இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் ரீமேக் செய்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள் எழுந்து வருகின்றன. தொடர்ந்து, பல படங்களில் நடிக்க திட்டமிட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் லூசிஃபர் ரீமேக்கை கருத்தில் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











