Salman Khan: அடி மேல் அடி... தமிழில் களமிறங்கும் சல்மான் கான்... அஜித் பட இயக்குநருடன் கூட்டணி
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் கடந்த 21ம் தேதி வெளியானது.
ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸான இந்தப் படம், தமிழில் அஜித் நடிப்பில் ஹிட்டான வீரம் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சல்மான் கான் நடிப்பில் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இதனால் கடுப்பான சல்மான் கான், அதிரடியாக தமிழில் களமிறங்க முடிவெடுத்துள்ளாராம்.

தமிழில் களமிறங்கும் சல்மான் கான்:பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக சல்மான் கான் நடித்த கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் கடந்த வாரம் 21ம் தேதி வெளியானது. சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே, வெங்கடேஷ், ஜகபதி பாபு உளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக்காக கிசி கா பாய் கிசி கி ஜான் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கான் அதிகம் நம்பியிருந்த இந்தப் படம் அவருக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை. ரசிகர்களின் நெகட்டிவ் விமர்சனங்களுடன் ட்ரோல் செய்யப்பட்டது. அதேநேரம் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்த கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் 16 கோடி ரூபாய் வசூலித்தது. முதல் வாரம் முடிவில் 68 கோடி வரையும் கலெக்ஷன் செய்தது. மேலும், 7 நாட்கள் முடிவில் 148 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது சல்மான் கான் படங்களுக்கு குறைவான ஓப்பனிங் என்றே சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான சல்மான் கான் படங்கள் எதுவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், அவர் கேமியோ ரோலில் நடித்திருந்த ஷாருக்கானின் பதான், ஆயிரம் கோடிக்கும் மேல் கலெக்ஷன் செய்தது. இந்நிலையில் தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வரும் சல்மான் கான், தனது அடுத்தப் படத்தின் இயக்குநரை தேர்வு செய்துவிட்டதாக தெரிகிறது.
அதன்படி அவர் அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்த்தனுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கவிருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் பில்லா, ஆரம்பம் படங்கள் மூலம் பிரபலமான விஷ்ணுவர்த்தன், 2021ல் ஷெர்ஷா என்ற இந்திப் படத்தை இயக்கியிருந்தார்.

ஸ்டைலிஷான மேக்கிங், ஆக்ஷன் ட்ரீட் என கமர்சியல் படங்களுக்கான இயக்குநராக வலம் வரும் விஷ்ணுவர்த்தன், சல்மான் கானுடன் இணையவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா ஜானரில் உருவாகவுள்ளதாம். கடந்தாண்டு சிரஞ்சீவியுடன் நடித்திருந்த காட்ஃபாதர் படம் மூலம் தெலுங்கிலும் பிரபலமாகிவிட்டார் சல்மான் கான்.
முன்னதாக அட்லீ அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க சல்மான் கான் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், இருவருமே அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளதால், இந்த திடீர் மாற்றம் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சல்மான் கான் - விஷ்ணுவர்த்தன் இணையும் படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications











