ஒவ்வொரு பாடலுக்காகவும்.. எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய சல்மான் கான் பிரார்த்தனை!
மும்பை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.
கடந்த 50 வருடமாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தியவர், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனை
இதனால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் விரைவில் குணமாகி திரும்பிவிடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 13 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

செயற்கை சுவாசம்
அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

முன்னேற்றம்
பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் அவர் மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்து இருந்தார். பின்னர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார் என்றும் கூறினார். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கவலைக்கிடமாக
51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை நேற்று திடீரென்று மோசம் அடைந்தது. அவர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

நடிகர் சல்மான்கான்
இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் அவர் குணமடைய பிரார்த்தித்து வருகிறார்கள். இதுபற்றி பாலிவுட் நடிகர் சல்மான்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூரண உடல்நலத்துடன் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன். எனக்காக பாடிய ஒவ்வொரு பாடலுக்காகவும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











