Salman Khan:என்ன ஆச்சு சல்மான் கானுக்கு.. இப்படி வந்து நின்னா யாருக்குத்தான் தூக்கி வாரிப் போடாது?
சென்னை: பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆதிக்கம் செலுத்தி வருபவர் சல்மான் கான். வயது என்பது வெறும் எண் தான் என்பதை தனது உடல்தகுதி, சிக்ஸ் பேக் தோற்றம் மற்றும் ஸ்டைலான லுக்கால் நிரூபித்து வந்த அவர், தற்போது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள், "இது உண்மையிலேயே சல்மான் கானா?" என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மும்பையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட 'டேட்டா கலெக்ஷன் அண்ட் வெரிஃபிகேஷன் சப்போர்ட் சென்டர்' திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்து கொண்டார். அங்கு ஐடி சர்வர் அறையை திறந்து வைக்க வந்தவரைப் பார்த்துத்தான் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

அதாவது, வழக்கமாக ஃபிட்டாகவும், பார்ப்பதற்கு யங்காகவும் தோன்றும் சல்மான் கான், இந்த நிகழ்வில் சோர்வாகவும், வயது முதிர்வின் தாக்கம் வெளிப்படும் வகையிலும் காணப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் முதலில் அவரைப் பார்க்கும் போது அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து பல்வேறு யூகங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. புதிய படத்திற்காக மேக்ஓவர் செய்திருக்கலாம் என்று சிலர் கூற, மற்றொரு தரப்பு இது வயது காரணமாக ஏற்பட்ட இயல்பான மாற்றம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தாலும், அதுகுறித்து சல்மான் கான் தரப்பிலோ அல்லது அவரது குடும்பத்தினரிடமிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சல்மான் கான், வழக்கம்போல தனது நகைச்சுவை பாணியில் பதிலளித்தார். "எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். ஆனால் அந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்காதீர்கள். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்" என்று சிரித்தபடியே கூறிய அவரது பதில் அங்கிருந்தவர்களையும் சிரிக்க வைத்தது.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, சல்மான் கான் தற்போது பல முக்கியமான படங்களில் பிஸியாக உள்ளார். தேசபக்தி பின்னணியில் உருவாகி வரும் 'மாத்ருபூமி', இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் புதிய பேன் இந்தியா படம் மற்றும் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் 'கிக் 2' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. சமீபத்திய தோற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு மட்டும் எந்தவிதத்திலும் குறையவில்லை என்றே கூறலாம். மொத்ததில் அவர் சொன்னதில் இருந்து அவரது தோற்றம் என்பது அடுத்த படத்திற்கானது என்று புரிந்து கொள்ள முடிகிறது என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications