பூஜா மறுத்தால் என்ன? புராணப் படத்தில் சகுந்தலையாக நடிக்கிறார் நடிகை சமந்தா.. இயக்குனர் அறிவிப்பு!
சென்னை: புராண கதையை கொண்ட படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், நடிகை சமந்தா.
அனுஷ்கா நாயகியாக நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான வரலாற்றுப் படம், ருத்ரமாதேவி. இதை இயக்கியவர் குணசேகர்.
இந்தப் படத்தில் ராணா, அல்லு அர்ஜுன் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழிலும் இந்தப் படம் வெளியானது.

இயக்குனர் குணசேகர்
இந்தப் படத்துக்கு முன் மகேஷ்பாபு, பூமிகா நடித்த ஒக்கடு, மகேஷ்பாபு, த்ரிஷா நடித்த சைனிகுடு உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார், குணசேகர். இவர், ஹிரன்யா கஷ்யபா என்ற படத்தை இயக்க இருந்தார். இதில் ராணா ஹீரோவாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது.

புராண காதல் கதை
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் அவர் தனது அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டார். அவர் சாகுந்தலம் என்ற புராண காதல் கதையை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். மகாபாரதத்தின் ஒரு கதாபாத்திரமான சகுந்தலையின் கதைதான் இது. விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்தவள், சகுந்தலை.

காந்தர்வ மணம்
இவர், மன்னர் துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் காந்தர்வ மணம் புரிந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரைப் பிரிகிறார் துஷ்யந்தன். முனிவர் சாபத்தால், துஷ்யந்தன் அவரை மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு துன்பங்களை கடந்து கணவருடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது கதை.

பூஜா ஹெக்டே
இந்தக் கதையை மையமாக வைத்து படம் உருவாகிறது. சகுந்தலையாக நடிக்க, பூஜா ஹெக்டேவிடம் இயக்குனர் குணசேகர் பேசியதாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க விருப்பமில்லை என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாயின. இதை தயாரிப்பாளர் மறுத்திருந்தார்.

மணி சர்மா இசை
இந்நிலையில், இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதை குணா டீம் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நீலிமா குணா தயாரிக்கிறார். மணி சர்மா இசை அமைக்கிறார். பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. ஏற்கனவே சகுந்தலையின் காதலை மையமாக வைத்து சில புராண படங்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











