'அந்த மகிழ்ச்சியை வெளியே சொல்ல முடியலை..' லேடி சூப்பர்ஸ்டாரை புகழும் நடிகை சமந்தா!
சென்னை: காத்துவாக்குல ரெண்டு காதல் கூட்டணியுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து, நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார்.
இதில், விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

நயன்தாரா காதல்
2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஹிட்டானது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் பட ஷூட்டிங்கில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. அந்தப் படத்துக்குப் பிறகு, சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

காத்து வாக்குல
கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நந்தா உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இதையடுத்து அவர் இயக்கும் படம், காத்துவாக்குல ரெண்டு காதல். இதில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நயன்தாரா, சமந்தா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

செவன் ஸ்கீரின்
இந்தப் படத்துக்கும் அனிருத் இசை அமைக்கிறார். லலித்குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோவும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங், சில மாதங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. பின்னர் ஐதராபாத்தில் நடந்தது. அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தக் கூட்டணி
திருமணத்துக்குப் பிறகு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்ட சமந்தா, இதன் ஷூட்டிங்கிற்காக சென்னை வந்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை சமந்தா கூறியிருப்பதாவது: இந்தக் கூட்டணியில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர்களுடன் நடிப்பது எவ்வளவு மகிழ்ச்சி என்பதை சொல்ல முடியவில்லை. நிச்சயம் இந்தப் படம் கலக்கலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

கடவுளின் அருளால்
காத்து வாக்குல ரெண்டு காதல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சமந்தா. அவர் போஸ்ட் போட்ட சில நிமிடங்களில் அதே போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்ட விக்னேஷ் சிவன் காதலர் தினத்தன்று அப்டேட் வரவிருக்கிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் கடவுளின் அருளால் நிறைவடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











