Yashoda Teaser: கர்ப்பவதியாக நடித்துள்ள சமந்தா.. அந்த படம் மாதிரி இல்லாம இருந்தா சந்தோஷம்!
சென்னை: டோலிவுட்டின் இரட்டை இயக்குநர்களான ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி சங்கர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள யசோதா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா சோஷியல் மீடியாவுக்கே முழுக்கு போட்டு விட்டார் என ஏகப்பட்ட தகவல் வெளியான நிலையில், தனது பட அறிவிப்புகளை மட்டும் தற்போது வெளியிட்டு வருகிறார்.
கர்ப்பவதியாகவும், ஆக்ஷன் நாயகியாகவும் நடித்துள்ள சமந்தாவின் யசோதா டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் ஒரு பக்கம் அந்த படம் மாதிரி வந்துடப் போகுது என்கிற பயத்தையும் கொடுத்துள்ளது.

யசோதா டீசர் மிரட்டுது
யசோதா என மருத்துவர் அழைத்து நீங்க பிரெக்னன்ட்டா இருக்கீங்க என சொல்வதில் இருந்து, கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர் சொல்ல சொல்ல, எப்படி எல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கும் நிலைக்கு சமந்தா தள்ளப்படுவதாக டீசரை கட் செய்த எடிட்டர் நிஜமாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

கர்ப்பவதியான சமந்தா
சாதாரண குடும்பப் பெண்ணாக மருத்துவமனைக்கு வரும் சமந்தா கர்ப்பவதியாக இருக்கும் காட்சிகளும், வயிற்றில் ஸ்கேன் எடுக்க காட்டும் சீன்களும் டீசரை பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்கிற உணர்வை தூண்டுகிறது. ஆனால், அடுத்த நொடி ஆச்சர்யமாக சமந்தாவின் கதாபாத்திரம் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் மாறுவது ரசிகர்களை ஷாக் ஆக்குகிறது.

பழி வாங்கும் படமா
யசோதாவின் கரு கலைந்து விடுகிறதா? அதற்காக சிலரை அவர் பழிவாங்கும் படலமாக இருக்குமா? இந்த படம் என்கிற யோசனையையும் டீசர் கொடுக்காமல் இல்லை. ஆனால், சில விஷுவல் எஃபெக்ட் காட்சியில் அதையும் தாண்டி வேறு ஒரு விஷயத்தை சொல்லப் போகிறது என்பதை மட்டும் உணர்த்துகிறது. அப்படி சொன்னால் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது கன்ஃபார்ம்.

வரலக்ஷ்மி சரத்குமார் வில்லியா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரை டீசரில் ஒட்டுமொத்தமாக மறைத்து வைத்துள்ள நிலையில், அவர் தான் வில்லியா? என்கிற கேள்வியும் எழுகிறது.

பெண்குயின் மாதிரி ஆகிடாதுல
கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்திலும் அவர் கர்ப்பவதியாக நடித்திருப்பார். தனது குழந்தையை காப்பாற்ற போராடுவார். கடைசியில் அவரது தோழியே வில்லியாக இருப்பார். அதே போல இந்த யசோதா படத்தின் கதையும் இருந்து விடக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். விரைவில் திரையரங்குகளில் சமந்தாவின் யசோதா ரூல் செய்ய காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











