சமந்தாவின் யசோதா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்..முதல் நாள் எவ்வளவு தெரியுமா?
சென்னை : நடிகை சமந்தா நடித்த யசோதா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா, வரலட்சுமி சரத்குமார் ,உன்னி முகுந்தன், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் யசோதா.
இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

யசோதா
ஃபேமிலி மேன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற வெற்றிப்படங்களின் வரிசையில் யசோதா படமும் இணைந்துள்ளது. மர்மம், த்ரில்,ஆக்ஷன் காட்சிகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் கதை சுவாரசியமாக நகர்கிறது. ஓர் இரவு, அம்புலி, ஆ, போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய ஹரி மற்றும் ஹரீஷ் அதே பாணியில் யசோதா படத்தை உருவாக்கி உள்ளனர்.

வித்தியாசமான கதை
கதையின் தொடக்கத்தில் ஒரு நடிகை கொல்லப்படுகிறார் அந்த கொலை குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதே நேரத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக யசோதா (சமந்தா) வாடகைத் தாய் ஆகிறார். அவரை ஒரு தனியார் நிறுவனம் பாதுகாத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மீது யசோதாவுக்கு சந்தேகம் வர அங்கு நடக்கும் மர்மங்களை தனியாக கண்டுபிடிக்கிறார். இறுதியில் இந்த நிறுவனத்திடம் இருந்து சமந்தா எப்படி தப்பினார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

விறுவிறுப்பான கதை
முதல் பாதியில் மெதுவாக செல்லும் இந்த கதை இரண்டாம் பாதியில் வேகமெடுத்து சீட்டின் நுனியில் நம்மை அமரவைக்கிறது. சண்டை காட்சிகளில் சமந்தா டூப்பே இல்லாமல் நடித்து இருக்கிறார். அதே போல, டப்பிங்கும் அவரே கொடுத்துள்ளதால், படத்திற்கு இதுவே பிளஸ்ஸாக அமைந்துள்ளது. படத்தை பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

முதல் நாள் வசூல்
உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியான யசோதா திரைப்படம், தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் முதல் நாளில் 3.20 கோடியை வசூலித்துள்ளது. 40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் இப்படம் வரும் வாரங்களில் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











