கையில் துப்பாக்கியுடன் அதிரடி வேட்டையாடும் சமந்தா.. மிரட்டலாக வெளியான 'எங்கள் தங்கம்' டிரைலர்!
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கெனப் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகை சமந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பவர்ஃபுல் ஆக்ஷன் அவதாரத்தில் களம் இறங்கியுள்ளார். இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் 'மா இண்டி பங்காரம்'. இத்திரைப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற தலைப்பில் வெளியாகிறது.
'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் புகழ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இந்தத் திரைப்படத்திற்குத் கதையை உருவாக்கியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த், லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வரும் ஜூன் 19-ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக இப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சுடத்தான் தெரியும்: சுமார் 3 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்தில் காதலனின் வீட்டிற்குள் நுழையும் சமந்தாவிடம், அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவராக நீங்க என்ன ஆளுங்க, சமைக்கத் தெரியுமா?, கோலம் போடத் தெரியுமா?, பாட்டுப் பாடத் தெரியுமா? ஒரு மருமகளுக்கு என்னென்ன தகுதி இருக்கு என கேட்கிறார்கள். ஆனால், சமந்தாவுக்கோ அவர்கள் கேட்ட எந்த விஷயமும் தெரியாது. அதற்குப் பதிலாக அவருக்குத் தெரிந்ததெல்லாம் துப்பாக்கி எடுத்து எதிரிகளைப் பொளந்து கட்டுவது மட்டும்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லி, ட்ரெய்லரின் பல இடங்களில் துப்பாக்கியை வைத்து வில்லன்களைப் புட்டுப் புட்டுச் சுட்டுத் தள்ளுகிறார் சமந்தா.
பன்ச் வசனம்: இந்தத் ட்ரெய்லரில் சமந்தா, சிறந்த மருமகளா இருக்க அழகு, அடக்கம், சமையல், பாட்டுன்னு பல தகுதிகள் இருக்கனும், ஆனா எனக்கு அப்படி எந்தத் தகுதியுமே இல்லையே என்று கன்னத்தில் கை வைத்து அவர் அப்பாவியாகப் பேசும் இடம் ரசிக்கும் படி உள்ளது. அடுத்த நொடியே, என் குடும்பத்துக்கு ஒண்ணுன்னா என் உயிரைக் கொடுத்தும் காப்பாத்துவேன் என ஆக்ரோஷமாக மாறி சமந்தா பேசும் வசனம் டிரைலரை சுவாரசியமாக்கி உள்ளது. யசோதா, தி ஃபேமிலி மேன் 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து, சமந்தா இந்தத் திரைப்படத்திலும் அதிரடி ஆக்ஷனில் புகுந்து விளையாடியுள்ளார் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும்போதே நன்றாகத் தெரிகிறது. இணையத்தில் வெளியாகி சில நிமிடங்களிலேயே அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications