அவ எனக்கு பொண்ணு இல்ல அம்மா.. கமலா காமேஷ் உருக்கமான பேட்டி!
சென்னை: மூத்த நடிகையான கமலா காமேஷ், 80 மற்றும் 90களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். 14 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது மகள் உமா ரியாஸ் கான் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
ஜெயபாரதி இயக்கத்தில் வெளியான குடிசை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கமலா காமேஷ். இந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்து போன விசு, அவருடைய நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதைத் தொடர்ந்து, விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் நடித்தார். மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற 6 படங்களில் நடித்தார். இதில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

நடிகை கமலா காமேஷ்: இதைத் தொடர்ந்து, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை பாட்டு சொல்லிக் கொடுக்கும் கார்த்திக்கின் அம்மாவாக நடித்தார். இந்த படத்திலும் இவர் கைத்தட்டலை பெற்றார். 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கமலா காமேஷ், இடுப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எழு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டு சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கிறார்.
உமா ரியாஸ் கான்: கமலா காமேஷ் நடிக்கவில்லை என்றாலும், இவரது மகள் உமா ரியாஸ் கான் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. அதில் இவருடைய மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார்.
மகள் தான் அம்மா: இந்நிலையில் நடிகை கமலா காமேஷ் அளித்துள்ள பழைய பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், மகள் உமா ரியாஸ் கான் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அவள் என் மகள் என்பதை விட அவள் எனக்கு அம்மா, நான் சிங்கிள் மதர் என்று சொல்லிக் கொள்வதை பெருமையாக நினைக்கிறேன். நான் அவளை வளர்த்தது என்பது வேறு விஷயம். ஆனால், அவள் தற்போது என்னை வளர்த்து வருகிறாள். அவளை பற்றி நான் பேச பேச உணர்ச்சி வசப்பட்டுவிடுவேன். என் மகளை உமா என்று நான் அழைப்பதைவிட அம்மா என்று தான் அழைப்பேன். அவளை என் அம்மாவாகத்தான் பார்க்கிறேன்.
சரியாக பயன்படுத்தவில்லை: மேலும், என் மகளின் திறமைக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரம் அமையவில்லை, அன்பே சிவம் மற்றும் மௌனகுரு திரைப்படத்தில் அவள் நன்றாக நடித்து இருப்பாள். ஆனால், அவளுக்கு அந்த மாதிரியான கதாபாத்திரத்தை யாரும் இதுவரை தரவில்லை என்று நடிகை கமலா காமேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











