சூப்பர் ஸ்டார் படம்னா உடனே போவீங்க.. கொந்தளித்த சமுத்திரகனி.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்களை கொடுத்துவிட்டு இப்போது நடிகராக கலக்கிக்கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. அவர் நடித்த வடசென்னை, விசாரணை உள்ளிட்ட ஏராளமான படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. விசாரணை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் அவர். கடைசியாக திரு மாணிக்கம் என்கிற படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சென்சேஷனல் ஆகியிருக்கிறது,
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சமுத்திரக்கனி. பாலசந்தர் இயக்கிய நாடகங்களிலும் பணியாற்றிருக்கும் சமுத்திரக்கனி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். தொடர்ந்து பாலசந்தருடன் பயணித்துவந்த அவர் விஜயகாந்த்தை வைத்து நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கினார். கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் நாடகங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இருப்பினும் சினிமா மீதான மோகம் விடாததால் நடிப்பிலும், இயக்கத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
நடிகர் டூ இயக்குநர்: அதன்படி சசிக்குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரத்தில் நடித்த சமுத்திரக்கனி அடுத்ததாக நாடோடிகள் படத்தை இயக்கினார். சசிக்குமார், விஜய் வசந்த், அனன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நட்பை மையமாக வைத்து உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்களை இயக்கினார். இவை அனைத்தும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை.

மீண்டும் நடிகரான சமுத்திரகனி: இந்தச் சூழலில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கனி. அதன்படி அவர் வேலையில்லா பட்டதாரி, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை உணர்த்தினார். அதன் பிறகு நடிகராக அவரது கிராஃப் உச்சம் சென்றது. அந்தவகையில்,விசாரணை, ஆர்.ஆர்.ஆர், துணிவு, வாத்தி என பல படங்களில் நடித்தார். இதில் விசாரணை படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.
விநோதய சித்தம்: நடிப்பில் கவனம் செலுத்தினாலும் சமுத்திரக்கனிக்குள் இருக்கும் படைப்பாளி உறங்காததால் விநோதய சித்தம் படத்தை அவர் இயக்கினார். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இறப்புக்கு பிறகு என்ன நிகழும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருந்ததால் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த ஜானரில் இதுவரை பெரும்பாலும் படங்கள் வராததால் இதனை ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர். அதற்கு பிறகு படம் எதையும் இயக்காமல் இருந்த அவர் கடைசியாக திரு மாணிக்கம் என்கிற படத்தில் நடித்திருந்தார். ஓரளவுக்கு படம் வரவேற்பை பெற்றது.
சமுத்திரகனி பேச்சு: இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் காட்டமாக சில கருத்துக்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், "மக்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் படம் என்றால் முதல் நாள் முதல் காட்சிக்கே சென்றுவிடுவார்கள். ஆனால் அப்பா, சாட்டை போன்ற படங்களுக்கெலாம் உடனே போகமாட்டார்கள். அந்த மாதிரி படங்களை தாமதமாக டிவியில் போடும்போது பார்த்துவிட்டு நல்லா இருக்கிறதென்று சொல்லிக்கொண்டு போய்விடுவீர்கள். ஆனால் அந்த படங்களுக்கெல்லாம் உழைப்பு ரொம்பவே பெரியது. கிட்டத்தட்ட்ட நான் ஏழு வருடங்கள் சேர்த்த பணத்தை வைத்துதான் அப்பா திரைப்படத்தை இயக்கினேன். ஆனால் அப்படம் நஷ்டத்தைதான் கொடுத்தது" என்றார்.


Click it and Unblock the Notifications