கார்ப்பரேட்டை எதிர்த்து பெட்டிக்கடை போடும் சமுத்திரக்கனி!
Recommended Video

சென்னை: சமுத்திரக்கனி நடிக்கும் அடுத்த படத்திற்கு பெட்டிக்கடை என பெயரிட்டுள்ளனர்.
நடிகர் சமுத்திரக்கனி சமூக அக்கறை கொண்ட கதைகளை மையப்படுத்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்போது லஷ்மி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பெட்டிக்கடை என பெயரிட்டுள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் சொல்லும்போது.. நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள்.ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அன்பாக " அண்ணாச்சி " பாய்" "செட்டியார்" என்று எதோ ஒன்றை சொல்லி அழைப்போம்.
ஒரு தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி-வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும்.இந்த சங்கிலியை கார்ப்பரேட் முதலாளிகள் அறுத்து எறிந்துவிட்டனர்.

சாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர் கேடு. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும் கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமாக பெட்டிக்கடை இருக்கும் என தெரிவித்தார்.
இந்தப் படத்தில் சமுத்திரகனி சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட ஆசிரியராக நடிக்கிறார்.இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி,சுந்தர் அஸ்மிதா, வர்ஷா என மூன்று பேர் உள்ளனர். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தில், ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அருள், சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கின்றனர். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். மரியா மனோகர் இசையமைக்கிறார். சினேகன், இசக்கிகார்வண்ணன் ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











