நிறைய பேர் சொல்லியிருக்காங்க.. விஜய்க்கு இருக்கும் தைரியம் வேறு எவருக்கும் இல்லை..சமுத்திரகனி அதிரடி
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர்; இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகவிருப்பதாக கூறியிருக்கிறார். விஜய்யின் இந்த முடிவுக்கு திரைத்துறையிலிருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்திருக்கின்றன. அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி விஜய்யை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அவரது பேச்சு விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை. மாறாக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி போட்டியிடவிருக்கிறது. அதற்கான வேலைகளை விஜய் கட்சியினர் இப்போதே தொடங்கியிருக்கின்றனர். கண்டிப்பாக விஜய்யை கோட்டைக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்று உறுதியும் எடுத்திருக்கிறார்கள் அவர்கள்.

சினிமாவுக்கு டாட்டா: மேலும் அரசியலில் முழு கவனம் செலுத்தவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று விஜய் அறிவித்துவிட்டார். அந்தப் படத்தை ஹெ.வினோத் இயக்குவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வந்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும்; சினிமாவிலிருந்து ஒதுங்கும் முடிவை அவர்கள் முழுதாக ரசிக்கவில்லை என்பதுதான் கள நிலவரம்.
சமுத்திரகனி பேட்டி: இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி பேசியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியலுக்கு வந்திருக்கும் தம்பி விஜய்க்கு எனது ஆதரவு எப்போதுமே உண்டு. அவர் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பாதிக்கக்கூடியவர். ஆனால் அரசியலுக்கு வருவதால் நடிப்பதை நிறுத்துவதாக கூறியிருக்கிறார். இதற்கு எவ்வளவு பெரிய தைரியம் வேண்டும் என யோசிக்க வேண்டும்.
யாருக்கும் இல்லை: இந்த தைரியம் யாருக்கும் இல்லை. தெலுங்கில் நான் பவன் கல்யாணுடன் பணியாற்றியிருக்கிறேன். அவரும் அரசியலில்தான் இருக்கிறார். ஆனால் அவர்கூட நடிப்பதை முழுதாக விட்டுவிடுகிறேன் என்று சொல்லவில்லை. கையில் இப்போது மூன்று படங்கள் வைத்திருக்கிறார் அவர். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் நடிப்பேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்: தமிழ்நாட்டில் நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசியலிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நடிப்பதை விட்டுவிடுவதாக ஒருபோதும் சொல்லியது கிடையாது. எனவே அரசியலுக்கு வருவதால் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்று கூறியிருக்கும் விஜய்க்கு எனது சல்யூட்” என்றார்.
விஜய்யின் நிலைப்பாடு: இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்று பலரும் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; அவர் கண்டிப்பாக கூட்டணி அமைக்கமாட்டார் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அதிலும் விஜயகாந்த் போல் தாக்கம் செலுத்துவாரா இல்லை கமல் ஹாசன் போல் தத்தளிப்பாரா என்பதற்கு காலத்திடமே விடை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..


Click it and Unblock the Notifications











