Vijay - 'எப்போதுமே நான் தயார்தான்'.. விஜய் கட்சியில் இணைகிறாரா அந்த இயக்குநர்?.. அவரே சொன்ன விஷயம்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபடவிருக்கிறார் விஜய். அவருக்கு யார் யார் எல்லாம் திரைத்துறையிலிருந்து ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறது விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.
கடைசி படம்: முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று விஜய் அறிவித்திருக்கிறார். எனவே அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 உருவாகிறது. அதனை வெற்றிமாறன் இயக்குவார் தகவல்கள் அதிகம் பரவின. ஆனால் இப்போதோ, வெற்றிமாறன் அந்தப் படத்தை இயக்கமாட்டார்; தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம்தான் அந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். அப்படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சமுத்திரகனி பேட்டி: இந்நிலையில் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை அடுத்து திரைத்துறையிலிருந்து அவருக்கு யார் யார் ஆதரவு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவு ஏற்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய் நல்ல மனிதர். அரசியல் செய்ய வருகிறார். அவருக்கு எப்போதுமே எனது முழு ஆதரவு இருக்கும். தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன். அவர் என்னை பிரசாரத்துக்கு கூப்பிடவில்லை என்றாலும். நல்ல விஷயத்துக்காக நானே முதலில் செல்வேன்" என்றார்.
தொடர்ந்து ஆதரவு: சமுத்திரகனியின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் என்ன விஜய் கட்சிக்கு வெளிப்படையா ஆதரவு தெரிவித்திருக்கிறாரே சமுத்திரகனி. அப்போ விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் கனியின் இணைப்பு படலம் நடக்குமோ என்று கூறிவருகிறார். முன்னதாக நடிகை வாணி போஜனும், விஜய்க்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிகாந்த்தும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அநேகமாக திரைத்துறையில் இன்னும் சிலர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தவெகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











