நடிகை சம்யுக்தாவுக்கு இரண்டாவது திருமணம்.. ஏங்கியதெல்லாம் கிடைத்தது.. சூப்பர் வாழ்த்து சொன்ன விஜே பாவனா
சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் இன்று சிம்ப்பிளாக திருமணம் நடந்து முடிந்தது. இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் சூழலில்; சம்யுக்தாவின் நெருங்கிய தோழியான விஜே பாவனா கூறியிருக்கும் வாழ்த்து கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோவையை சேர்ந்த சம்யுக்தா கடந்த சில வருடங்களாக வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக கோலிவுட்டில் ஜொலித்துவருகிறார். வாரிசு, காரி, மெட்ராஸ் மாஃபியா கம்பெனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர்; இன்னும் சில படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் டூ விவாகரத்து: இதற்கிடையே சம்யுக்தா சண்முகநாதனுக்கும் கார்த்திக் என்ற தொழிலதிபருக்கும் சில வருடங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சின்ன சின்ன விரிசல்கள் நாளடைவில் பெரிதாகி; அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். கடந்த வருடம்தான் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது.

என்ன காரணம்?: விவாகரத்து குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த சம்யுக்தா, "எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. கொரோனா லாக் டவுனில்தான் என்னுடைய கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் துபாயில் 4 வருடங்களுக்கும் மேலாக உறவு இருப்பது உறுதியானது. அந்த சமயத்தில் என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. அப்போது எனக்கு உதவியாக இருந்தது விஜே பாவனாதான். நான் இருந்த அப்பார்ட்மென்ட்டில்தான் அவரும் இருந்தார். அந்த சமயத்தில் எனக்கு ரொம்பவே ஆறுதல் கூறினார்" என்றிருந்தார்.
அனிருதாவுடன் திருமணம்: முதல் திருமண முறிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த சம்யுக்தாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த்துடன் காதல் ஏற்பட்டது. அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க இவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இன்று அவர்களின் திருமணம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது.
பாவனாவின் வாழ்த்து: பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவரும் சூழலில் சம்யுக்தாவின் நெருங்கிய தோழியான விஜே பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அன்புள்ள சம்யுக்தா. உனது இதயம் வலுவாகவும் பெரிதாகவும் இருக்கிறது. கஷ்டமான நேரங்களில் போதுமான அளவு தைரியமாக இருந்தது. உனக்கென்று இருக்கும் நல்ல விஷயங்களை ஈர்க்கும் அளவுக்கு பெரிதாக உன்னுடைய மனது இருக்கிறது. இந்தத் திருமண நாளில் உனது முகத்தில் சிரிப்பு, பூரிப்பை பார்க்கிறேன். அதைவிட முக்கியமாக உனது மனது முழுக்க மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.
இறுதியாக உனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டாய். அனிருதாவிடம் உனக்கான நிரந்தர இடத்தை அடைந்துவிட்டாய். உன்னுடைய மனது எதற்கெல்லாம் இத்தனை வருடங்களில் ஏங்கியதோ அதெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதேபோல், அனிருதா உன்னுடைய வீட்டின் நிரந்தர பிக்பாஸ் (சம்யுக்தா) யாரென்று உனக்கே தெரியும். புதிய இன்னிங்ஸை தொடங்குவதற்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











