சினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு!
சென்னை: பிரபல நடிகை சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிம்பு, சினேகா நடித்த சிலம்பாட்டம் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்தவர், சனாகான். இதில் இவர் நடிப்பு கவனிக்கப்பட்டது.
பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

காதலித்து வந்தார்
சமீபத்தில், விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார். இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.

தெரிய வந்தது
இந்நிலையில், மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று திடீரென்று தெரிவித்தார், சனா கான். இது பரபரப்பானது. அவர் கூறும்போது, நான் மெல்வினை முழுமனதாகக் காதலித்தேன். 8 மாதங்கள் பழகிய பிறகு மெல்வின், சிலரை ஏமாற்றுவதாக ஒருவர் தெரிவித்தார்.

பரபரப்பு புகார்
அவர் பற்றிய உண்மை தெரியவந்ததால் காதலை முறித்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் மெல்வினும் சனாகானும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். மெல்வின் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

புகழ், மரியாதை, பணம்
இந்நிலையில், தான் சினிமாவில் இருந்து விலகுவதாக இப்போது அவர் திடீரென அறிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் பேசுகிறேன். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன். புகழ், மரியாதை, பணம் எல்லாம் கிடைத்தது. அதற்காக நன்றி.

சம்பாதிக்க மட்டுமே
கடந்த சில நாட்களாக ஓர் எண்ணம் என்னை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. ஒருவர் பணம், புகழை சம்பாதிக்க மட்டும்தான் பூமியில் பிறக்கிறாரா? உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதும் ஆதரவளிப்பதும் தார்மீக பொறுப்பில்லையா? எந்த நேரத்திலும் ஒருவர் இறக்கக் கூடும் என்ற நிலையில், இறந்த பின் என்ன நடக்கும் என்பதை மக்கள் நினைக்க வேண்டாமா?

நீண்ட நாட்களாக
இந்த கேள்விகளுக்கான விடையை நீண்ட நாட்களாக தேடி வருகிறேன். குறிப்பாக, மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்ற எனது இரண்டாவது கேள்விக்கான பதிலை. எனது மதத்தில் இதற்கான பதிலைத் தேடியபோது, நாம் பிறப்பதே, நம் இறப்பிக்கு பின் நடக்கும் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் விஷயங்களை இப்போது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

வெளியேறுகிறேன்
அதனால் நம்மை படைத்தவர் என்ன வகுத்திருக்கிறாரோ, அதை செய்ய வேண்டும். பணம், புகழ் மட்டுமே இலக்காக இருக்கக் கூடாது. மனித குலத்துக்கு சேவை செய்ய வேண்டும். அதனால்தான், இன்று முதல், சினிமா வாழ்க்கையை விட்டு வெளியேறுகிறேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க மனிதகுலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











