சமூக நீதியும் சனாதனமும் ஒன்னு.. நடிகர்களுக்குத் தகுதி இல்லையா? சத்யராஜை கடுமையாக விமர்சித்த பேரரசு
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களில் சிலர் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படையாக சொல்லத் தயங்கியது இல்லை என்றாலும், பலரும் நமக்கு எதற்கு வம்பு என்று கப்சிப் என்று இருந்துவிடுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசியல் களத்தை தமிழ் சினிமாவில் இருந்து பிரிப்பது என்பது சிரமம். அண்ணா தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி தொடங்கி தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துக் கொண்ட விஜய் வரை பலருக்கும் திரைத்துறையில் நேரடித் தொடர்பு உள்ளது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகி இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்ததும் திரைத்துறையில் பலருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டது. இப்படி இருக்கும்போது, தாங்கள் நேரடியாக கட்சி தொடங்கவில்லை என்றாலும், தங்களது அபிமான அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர்களும் நடிகைகளும் பலர் உள்ளனர்.
அப்படி திராவிடக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ். அவர் தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல், ஒரு பெரியாரிஸ்ட்டாகவும் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு இயக்குநர் பேரரசு மிகவும் காட்டமான பதிலை அளித்துள்ளார்.

இயக்குநர் பேரரசுவின் பதிலில், " திரு. சத்யராஜ் அவர்களே, நீங்கள் யார்? தியாகியா? அரசியல்வாதியா? அல்லது திரைப்பட நடிகரா திரைப்படத் துறையில் இருந்து கொண்டே, இனிமேலும் நடிகர்களை சிறுமைப்படுத்திப் பேசாதீர்கள்! உங்கள் மகளுக்கு திமுகவில் பதவி கிடைத்தது எப்படி? 'தியாகி' சத்யராஜின் மகள் என்ற முறையிலா கிடைத்தது? இல்லை, 'பிரபல நடிகர்' சத்யராஜின் மகள் என்ற முறையில் தான் உங்கள் மகளுக்குப் பதவி கிடைத்தது.
உங்களை மேடையில் அமர வைத்ததற்குக் காரணம் என்ன? நீங்கள் மக்களுக்காகப் பல போராட்டங்களைக் கண்டவரா? அல்லது மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தவாதியா? உங்களை மேடை ஏற்றியதற்கான தகுதி, நீங்கள் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்பது மட்டும்தான்!
நடிகர்கள் என்றால் ஒன்றும் தெரியாதா?: ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசுங்கள், அது உங்கள் விருப்பம்; அதில் தவறில்லை. ஆனால், "நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் முட்டாள்கள்" என்ற தோரணையில், ஒரு நடிகராக இருந்து கொண்டு நீங்கள் பேசாதீர்கள். இந்தக் கருத்து உங்கள் முகத்திற்கே முன்னேயும் திரும்பும்..
சோறுபோட்ட சினிமா: திரைத்துறையைச் சார்ந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கலாம். ஆனால், எந்தத் துறை, எந்தத் தொழில் நமக்குச் சோறு போட்டதோ, அந்தத் தொழிலுக்கு எதிராக நாம் இருக்க கூடாது! இன்னொன்று, சமூக நீதிக்கும் சனாதனத்திற்கும் போட்டியே வராது. ஏனென்றால், சனாதனம் என்பதே சமூக நீதிதான்" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்: இவரது இந்த கருத்துக்கு பலரும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக சத்யராஜ் நடிகர் என்ற காரணத்தால் தான் திராவிட இயக்க மேடைகளில் சத்யராஜ்க்கு இடம் கிடைக்க காரணமே, அவர் பெரியாரிஸ்ட் என்பதால் தான். நடிகர் என்றால் திராவிட இயக்க மேடைகளில் இடம் கிடைக்கும் என்றால் அனைவருக்கும் இடமும் அங்கீகாரமும் கிடைக்குமே என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதேபோல், சமூகநீதியும் சனாதனமும் ஒன்னு என்று நீங்கள் கூறியதில் இருந்தே தெரிகிறது உங்கள் அரசியல் புரிதல் நிலை என்று பதிவிட்டு வருகிறார்கள்


Click it and Unblock the Notifications











