காத்திருந்து.. காத்திருந்து.. ஒரு வருஷமா விஜய் மகனுக்கு ஹீரோ கிடைக்கலையா?.. அவரும் எஸ்கேப்பா?
சென்னை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்கிற அறிவிப்பை புகைப்படங்களுடன் லைகா நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதமே முடிய உள்ள நிலையில், இன்னமும் ஜேசன் சஞ்சய்யின் படம் ஆரம்பிக்காமல் உள்ளதாக கூறுகின்றனர்.
தந்தை விஜய்யின் நிழலில் இயக்குநராக விரும்பாத ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநராக முடிவெடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக அம்மா சங்கீதா தனது மகனை இயக்குநராக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

வெளிநாட்டில் சினிமா படிப்பை படித்து முடித்த ஜேசன் சஞ்சய் சில குறும்படங்களை இயக்கி இருந்தார். தமிழில் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநராக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் இதுவரை அவர் படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிடவில்லை.
கவின் முதல் சந்தீப் கிஷன் வரை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிப்பார் என்றும் அதர்வா ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் பிக் பாஸ் கணிப்பு போட்டியாளர்கள் போல வெளியாகின. கடைசியில் சந்தீப் கிஷன் தான் கன்ஃபார்ம் என்று சமீபத்தில் கூட சில செய்திகள் வெளியாகின. ஆனால், இதுவரை லைகா நிறுவனம் எதையுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
நிதி நெருக்கடி: லைகா நிறுவனம் ஏற்கனவே லால் சலாம், இந்தியன் 2 படங்களின் தோல்வியால் துவண்டு கிடக்கும் நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கான செலவுகளும் அதிகம் ஆகிவிட்டதாம். வேட்டையன் திரைப்படம் வெற்றியை கொடுத்தால் மட்டுமே லைகா நிறுவனம் தலை தப்பிக்கும் நிலை உள்ளது என்கின்றனர்.
சந்தீப் கிஷனும் இல்லை?: சந்தீப் கிஷன் நடிக்கும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் மற்றும் ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கேப்டன் மில்லர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ராயன் திரைப்படம் 150 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், சந்தீப் கிஷனை வைத்து சஞ்சய் இயக்கினால் படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஒரு ஆப்ஷன் தான் என்றும் இன்னமும் ஹீரோவை உறுதி செய்யவில்லை எனக் கூறுகின்றனர்.
விஜய் அட்மின் தயாரித்து இருந்தால்: நடிகர் விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் பழனிச்சாமி தி ரூட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படம் ரிலீஸுக்கு ரெடியாகி வரும் நிலையில், அடுத்ததாக தளபதி 69 படத்தையும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். ஜெகதீஷ் தயாரிப்பில் விஜய் மகன் படம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தால், இந்நேரம் படமே வெளியாகி இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











