வீரப்பன் என்றும் எல்லைச்சாமி தான்.. நேர்மையில்லாத படைப்பை மக்கள் புறக்கணிப்பார்கள்.. கௌதமன் பேட்டி!
சென்னை: வீரப்பனின் கதை சர்ச்சைக்குரிய ஒரு கதையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது வீரப்பன் நல்லவரா? கெட்டவரா? என்கிற கேள்வி பலரின் மனதில் பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.
நெட்ப்ளிக்ஸில் பல கேள்விகளுடன் வெளியான The Hunt for Veerappan ஆவண தொடர் பலவிதமான சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் கௌதமன் The Hunt for Veerappan படம் குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.
உண்மைக்கதை: அதில், வீரப்பனின் உண்மைக்கதை என்ன என்பதை என்னிடம் கேட்பதை விட, நான் எடுத்த சந்தனக்காடு படத்தை உலகமே பார்த்தது. ஏன் என்றால், அதில் எந்தவிதமான கலப்பும் இல்லை. அப்படி உலகமே பார்த்தற்கு காரணம் அதில் இருந்த உண்மைத்தன்மை தான். அதிகார வர்க்கத்தில் யார் யாரெல்லாம் என்னென்ன தவறு செய்தார்களோ அதையும், வீரப்பன் செய்த தவறையும் அந்த தொடரில் காட்டி இருக்கிறேன்.

பணம் சம்பாதிக்கும் கூட்டம்: ஆனால், வீரப்பனின் பெயரை வைத்து பணம் சம்பாதித்த கூட்டம், வீரப்பன் பற்றி அடுக்கடுக்கான கட்டுக்கதைகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். காட்டில் மிருகத்தோடு மிருகமாக இருந்த வீரப்பன் பல சந்தர்ப்பங்களில் மனிதனாக இருந்தார். ஆனால், நாட்டில் மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்த அதிரடிப்படையினர்,காவல்துறையினர் அந்த ஊருக்குள் சென்று மிருகமாக நடந்து கொண்டார்கள்.
நேர்மை இல்லாத படைப்பு: அந்த மிருகக்கூட்டம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு படைப்பை கொடுத்தார்கள் என்றால், அது எப்படி சரியானதாக இருக்கும். எங்களின் தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி, துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்தனர். இதை மறைப்பதற்காக, கர்நாடக மாதேஸ்வரன் முகாமுக்கு அனுப்பி கொடுமைப்படுத்தி, பின் மேட்டூர் அணையில் வீசினார்கள். அந்த மண்ணில் அப்படி நடந்து கொண்ட காவல்துறையை வைத்து எடுக்கப்படும் படைப்பை என்ன என்று சொல்வது. நேர்மை இல்லாத படைப்புகளை மக்கள் நிச்சம் புறம் தள்ளுவார்கள்.

வீரப்பன் ஒரு எல்லைச்சாமி: வீரப்பன் கொடூரமானவன், தீவிரவாதி என்று சொல்லும் நீங்கள், வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று, 500க்கும் மேற்பட்ட பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர்களை என்னவென்று சொல்லுவது. 18 ஆண்டுகள் அதிரடிப்படை அங்கிருந்து ஒரு நல்லதையும் செய்யவில்லை. ஆனால், வீரப்பனால் அங்கிருந்த ஒருவருக்கும் ஒரு தீங்கும் நடந்தது இல்லை. இதனால், அந்த கிராம மக்கள் வீரப்பனை நாயகனாக பார்க்கிறார்கள். வீரப்பன் ஒரு எல்லைச்சாமி தான், வனக்காவலர் தான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications











