சண்டக்கோழி டு கிரி.. ரீமேக் கிங் சிரஞ்சீவி சர்ஜா.. மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் அர்ஜுன் குடும்பம்
பெங்களூரு: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் திடிரென உயிரிழந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணத்தால் அர்ஜுன் குடும்பமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது.
Recommended Video
சிரஞ்சீவி சர்ஜாவின் மாமாவான அர்ஜுன் தயாரிப்பில் கடந்த 2009ம் ஆண்டு தமிழில் வெளியாகி மெகா ஹிட்டான சண்டக்கோழி படத்தின் கன்னட ரீமேக் படமான வாயுபுத்ரா மூலம் அறிமுகமானவர்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிவார்ஜுனா படம் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கிரி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்னா ராஜ்
2010ம் ஆண்டு தமிழில் வெளியான காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான நடிகை மேக்னா ராஜை கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயம் செய்து, 2018 மே 2ம் தேதி திருமணம் செய்து கொண்டார் சிரஞ்சீவி சர்ஜா. திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் இப்படி உடல்நலக் குறைவால் உயிரிழப்பார் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.

சண்டக்கோழி ரீமேக்
ரீமேக் கிங்கான சிரஞ்சீவி சர்ஜா, தனது மாமா அர்ஜுன் மற்றும் அவரது சகோதரர் கிஷோர் சர்ஜா தயாரிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், பிரியா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான சண்டக்கோழி படத்தின் ரீமேக் தான் வாயுபுத்ரா.

பீட்சா ரீமேக்
விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் அறிமுக படமான பீட்சா படத்தை கன்னடத்தில் விசில் என்ற பெயரில் 2013ம் ஆண்டு ரீமேக் செய்து நடித்திருந்தார் சிரஞ்சீவி சர்ஜா. இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் சகுனி நாயகி பிரணிதா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

காக்க காக்க ரீமேக்
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த காக்க காக்க படத்தின் கன்னட ரீமேக்கில் இவர் தான் ஹீரோ. தண்டம் தஷகுணம் என்ற டைட்டிலில் 2011ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ‘குத்து' ரம்யா ஜோடியாக நடித்திருந்தார்.

ரீமேக் கிங்
மறைந்த சிரஞ்சீவி சர்ஜா இதுவரை நடித்த 19 படங்களில் 14 படங்கள் தமிழ் மொழியில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் தான். முதல் படமான வாயுபுத்ரா முதல் கடந்த ஆண்டு வெளியான கிரி படத்தின் ரீமேக்கான சிவார்ஜுனா படம் வரை பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் திடீரென உடல் நலக் குறைவால் உயிரிழந்தது கன்னட திரைத்துறை மற்றும் நடிகர் அர்ஜுனின் குடும்பத்துக்கு மிகபெரிய இழப்பாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications