Sandy Master - லோகேஷ் என்னை அப்படியே மாற்றிவிட்டார்.. லியோ பற்றி சாண்டி மாஸ்டர்
சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தில் நடித்தது குறித்து சாண்டி மாஸ்டர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கலாம் என தெரிகிறது.
ஆடியோ ரிலீஸ் எங்கே?: திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தற்போது மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
சஞ்சய் தத், அர்ஜுன் க்ளிம்ப்ஸ்: லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சஞ்சய் தத்தான் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. அவரது க்ளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியானது. அவர் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதேபோல் அர்ஜுன் தொடர்பான க்ளிம்ப்ஸ் கடந்த 15ஆம் தேதி வெளியானது. அவர் ஹரோல்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
சாண்டி மாஸ்டர்: இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "என்னை இதுவரை ரசிகர்கள் ஜாலியாகத்தான் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் லியோவில் லோகேஷ் கனகராஜ் மொத்தமாகவே என்னை மாற்றிவிட்டார். அவர் அட்டகாசமான க்ரியேட்டர். லியோவில் என்னை வித்தியாசமாக காண்பித்திருக்கிறார். படத்தில் விஜய்யுடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகளும் இருக்கின்றன" என்றார்.
பேட்ச் ஒர்க்: முன்னதாக படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த சூழ்நிலையில் படத்துக்கான பேட்ச் ஒர்க் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதற்காக லோகேஷ் கனகராஜ் காஷ்மீர் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் படத்துக்கான டப்பிங் பணிகளும் ஆரம்பிக்கவுள்ளன. படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











