பிகில் கைதிக்கு வழிவிட்ட சங்கத்தமிழன் - நவம்பர் 15ல் ரிலீஸ்
சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் வரும் நவம்பர் 15ஆம் தேதியன்று ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி அறிவித்துள்ளார். முன்னதாக தீபாவளியன்று இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் தீபாவளியன்று வெளியிடப்பட்டதால், இப்படத்தை வெளியிடுவதை நவம்பர் வரை ஒத்திவைத்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் சங்கத்தமிழன். விஜய்சந்தர் இதற்கு முன்பு வாலு மற்றும் ஸ்கெட்ச் படங்களை இயக்கியவர். விவேக் மற்றும் மெர்வீன் படத்திற்கு இசையமைத்து உள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் வேல்ராஜ்.
விஜய் சேதுபதி கடைசியாக சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. தமிழில் கடைசியாக எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்த சிந்துபாத் படத்தில் நடித்திருந்தார்.
விஜய் சேதுபதி தமிழின் முன்னணி நடிகராக மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதை தேர்விலும் விஜய் சேதுபதி மிக கவனமாய் இருப்பார். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டே இருக்கும்.
விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் 60 வயது முதியவராக நடித்து இருப்பார். அது வரையிலும் தமிழ் சினிமாவில் கமலைத் தவிர, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் எந்த நடிகரும் நடித்தது கிடையாது. இப்படி பல்வேறு வகையான சாதனைகளை செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதற்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி படங்கள் முந்தி கொள்ள இந்தப்படம் வேறு வழியின்றி தள்ளிப்போக நேர்ந்தது. தற்போது இப்படம் நவம்பர் 15ஆம் தேதியன்று வெளியிட படக்குழு உறுதி செய்துள்ளது.
படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் இணையதளத்தில் பலரால் பார்க்கபட்டு வருகிறது. முக்கியமாக கமலா கலாஷா பாடல் வைரல் ஆகியுள்ளது. இதுவரையிலும் இப்பாடலை 3 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











