முதன்முறையாக விஜய் சேதுபதி இரட்டை வேடம்.. ஆக்ஷன் அதகளம்.. சங்கத்தமிழனை இதுக்காகவே பார்க்கலாம்!
விஜய் சேதுபதியின் சங்கத்தமிழனைப் பார்க்க இதோ ஐந்து காரணங்கள்.
Recommended Video
சென்னை: விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் இன்று வெளியாகியுள்ளது.
முதன்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் அவர். அதோடு, கதாபாத்திரத்திற்கு கதாபாத்திரம் வேறுபாடு காட்டவும் அவர் தவறுவதில்லை.
அந்தவகையில் இப்படத்தில் நிச்சயம் தனது இரண்டு கதாபாத்திரத்திலும் நம்மை ரசிக்க வைப்பார் என எதிர்பார்க்கலாம். அதோடு இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா என இரண்டு நாயகிகள் உள்ளனர். இசை விவேக் - மெர்வின். காமெடிக்கு சூரி இருக்கிறார்.
இப்படியாக இப்படத்தைப் பார்ப்பதற்கான 5 முக்கியமான காரணங்கள் பற்றி இங்கு நாம் அறிந்து கொள்ளலாம்.

இரட்டை வேடத்தில் விஜய் சேதுபதி
முதல் காரணம் நிச்சயம் விஜய் சேதுபதி தான். வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களாக தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சங்கமித்ரன், தமிழரசன் என்ற அவரது இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களைச் சேர்த்து தான் படத்திற்கு சங்கத்தமிழன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விஜய் சந்தர்!
ஏற்கனவே சிம்புவை வைத்து வாலு, விக்ரமை வைத்து ஸ்கெட்ச் போன்ற படங்களைத் தந்தவர் விஜய் சந்தர். மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு படங்களும் விஜய் சந்தருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. எனவே சங்கத்தமிழனையும் அதே போன்று வித்த்யாசமான கதைக்களத்தில் தந்திருப்பார் என நம்பலாம்.

சூரி – விஜய் சேதுபதி கூட்டணி
விஜய் சேதுபதி ஏற்கனவே இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காதலும் கடந்து போகும் என பல காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தனது படங்களில் காமெடிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்தவகையில் இப்படத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் சூரி இணைந்து நடித்துள்ளார். எனவே நிச்சயம் காமெடி களை கட்டும் என எதிர்பார்க்கலாம்.

அதிர வைக்கும் ஆக்ஷன்
படத்தின் டீசரிலேயே சங்கத்தமிழன் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் வைக்க மாட்டார் என்பது தெள்ளத்தெளிவாகி விட்டது. ஏற்கனவே விஜய் சேதுபதி ஆக்ஷன் காட்சிகளில் தனக்கென கேஷுவலான ஒரு ஸ்டைலை வைத்திருப்பார். டீசரிலும் அது மாஸாகத் தெரிகிறது. எனவே சங்கத்தமிழன் நிச்சயம் குடும்ப சென்டிமென்டோடு ஆக்ஷன் விருந்தாகவும் இருக்கும் என நம்பலாம்.

இரட்டை விருந்து
கிராமத்து கதைக்களம், விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்க முயற்சிக்கும் பணக்கார முதலைகள் என சங்கத்தமிழன் காதல், குடும்ப சென்டிமென்ட் என்பதையும் தாண்டி, நிச்சயம் சமூகத்திற்கு நல்லதொரு கருத்தைச் சொல்லும் படமாக இருக்கும் என டீசரைப் பார்க்கும் போதே தெரிந்தது. நிச்சயம் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு காதல், குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன், சமூகக் கருத்து என இரட்டை விருந்து படைப்பான் இந்த சங்கத்தமிழன்.


Click it and Unblock the Notifications











