கொரோனாவால் பாதிப்பு.. பிரபல இயக்குனர் சங்கீத் சிவன் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை!
கொச்சி: பிரபல இயக்குனர் சங்கீத் சிவன் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவனின் சகோதரர், சங்கீத் சிவன்.
மலையாளம் மற்றும் இந்தியில் பல படங்களை இயக்கி உள்ளார். இதில் சில படங்கள் ஹிட்டாகியுள்ளன.

தமிழில் அசோகன்
இவர், மோகன்லால், மது, ஊர்வசி நடிப்பில் யோதா என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்த படம், தமிழில் அசோகன் என்ற பெயரில் வெளியானது. அடுத்து அரவிந்த்சாமி, கவுதமி நடித்த டாடி என்ற மலையாளப் படத்தை இயக்கி இருந்தார்.

கியா கூல் ஹே தும்
இது, தமிழில் டாடி மம்மி என்ற பெயரில் வெளியானது. ஜானி, கந்தர்வம், நிர்ணயம், இடியட்ஸ் உட்பட பல மலையாளப் படங்களை இயக்கியுள்ள சங்கீத் சிவன், இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார். சன்னி தியோல், சுஷ்மிதா நடித்த ஸோர், துஷார் கபூர் நடித்த கியா கூல் ஹே தும், தெலுங்கு ஒத்தடு ரீமேக்கான ஏக் உட்பட சில படங்களை இயக்கினார்.

உடல் நிலை
சில படங்களை தயாரித்துள்ள சங்கீத் சிவன், கடைசியாக, குக்கு சுரேந்திரன் இயக்கிய இ என்ற ஹாரர் படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சங்கீத் சிவனுக்குத் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது.

தொற்று உறுதி
இதையடுத்து கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவர் நான்கு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் கண்காணிப்பு
செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை இப்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











