நடிகை சங்கீதா-நிபந்தனை தளர்வு
புதுமுக இயக்குநர் செல்வா கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ள புதுமுக நடிகை சங்கீதாவின் ஜாமீன் நிபந்தனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டது.
சென்னை வடபழனியில் அறையில் தங்கியிருந்த இயக்குநர் செல்வா மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் கொலை செய்ததாக செல்வாவின் படத்தில் நடித்து வந்த சங்கீதாவைப் போலீஸார் கைது செய்தனர்.அதன் பின்னர் சங்கீதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன்படி மதுரை ஒத்தக்கடையில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்துப் போட்டு வந்தார் சங்கீதா.
இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி சங்கீதா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், தன் மீதான வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரியிருந்தார் சங்கீதா.
இதை இன்று விசாரித்த நீதிபதி ரகுபதி, சங்கீதா மதுரையில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











