சனாதனம் அழிச்சிடுச்சுனு சொன்ன சங்கீதாவின் கணவர் க்ரிஷ்.. இப்போ பொளக்குறாங்க.. யார் காப்பாத்துவாங்க?
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். அவர் தேர்தலில் வென்றது அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள் என பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர் வென்ற பிறகு நடிகை சங்கீதாவின் கணவரும், பின்னணி பாடகருமான க்ரிஷ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், 'சனாதனம் உங்களை ஒழித்துவிட்டது' என்று விஜய்யின் எதிர்தரப்பை சாடியிருந்தார். இந்நிலையில் க்ரிஷ்ஷை இப்போது நெட்டிசன்கள் மீம்ஸ், ட்ரோலில் அட்மிட் செய்திருக்கிறார்கள்.
பிதாமகன் படத்தின் மூலம் வெகு பிரபலமானவர் சங்கீதா. அதற்கு பிறகு பல படங்களில் நடித்த அவர் பின்னணி பாடகர் க்ரிஷ்ஷை கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். சங்கீதா போன்றே க்ரிஷ்ஷும் திரையுலகத்தில் ரொம்பவே பிரபலமானவர்தான். ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கும் அவர் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சங்கீதா இப்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருக்கிறார். க்ரிஷ்ஷுக்கு முன்னர் போல் பெரிதாக பாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை. சில கான்செர்ட்டுகளில் பாடுகிறார்.

விஜய்தான் எல்லாமே: சங்கீதாவும், க்ரிஷ்ஷும் இப்போதைய முதலமைச்சர் விஜய்க்கு ரொம்பவே நெருக்கமானவர்கள். விஜய் நடிகராக இருந்தபோது எல்லோரும் சேர்ந்து நன்றாகவே பார்ட்டி செய்வார்கள் என்று எழுந்த பேச்சுக்களும் நினைவுகூரத்தக்கது. அதேபோல் யாரிடமும் கிசுகிசுவில் சிக்கக்கூடாது என்று சங்கீதாவுக்கு விஜய் அன்போடு கண்டிஷன் போட்டிருக்கிறார். மேலும் சங்கீதாவுக்கும், க்ரிஷ்ஷுக்கும் திருமணம் முடிந்ததை அடுத்து அவர்களை தன் வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்தி, விருந்து வைத்து அனுப்பி வைத்தார்.
பதவியேற்பு விழாவில்: விஜய் இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருப்பதை நினைத்து இரண்டு பேரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அது பதவியேற்பு விழாவுக்கு அவர்கள் வந்தபோது முகத்திலேயே தெரிந்தது. கண்டிப்பாக தங்கள் விஜய் அண்ணா தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்குவார் என்பது அவர்களது அபரிமிதமான நம்பிக்கையாக இருக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சங்கீதாவின் கணவர் க்ரிஷ தேர்தல் ரிசல்ட்டையொட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
என்ன வீடியோ?: அதாவது அடிப்படையில் சனாதன ஆதரவாளரான க்ரிஷ் அந்த வீடியோவில், 'சனாதனத்தை அழிப்போம் என்று சொன்னவர்களை சனாதனம் அழித்துவிட்டது. இதைத்தான் சனாதனம் செய்யும். ஆட்சி செய்வதற்கு கரிகால சோழன் வந்துவிட்டார்' என்று பேசியிருந்தார். அந்த வீடியோவை பார்த்த சனாதன எதிர்பாளர்கள் க்ரிஷ்ஷுக்கு பதிலடி கொடுத்துவந்தார்கள். ஆனால் விஜய் பதவியேற்ற அலையில் அது வெளியே சரியாக கேட்கவில்லை. இப்போது உதயநிதி ஸ்டாலினின் சட்டப்பேரவை பேச்சால் இந்த விஷயம் மீண்டும் பலரது கவனத்துக்கு வந்திருக்கிறது.
க்ரிஷ்ஷுக்கு ஓவர் அடி: நேற்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சின் இறுதியில், 'சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என முழங்கிவிட்டு அமர்ந்தார். அதை பார்த்த பிறகு திமுகவினர், சனாதன எதிர்ப்பாளர்கள் எல்லோரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு; தங்களது வண்டியை க்ரிஷ் பக்கம் திருப்பினார்கள்.
அவர்கள் க்ரிஷ்ஷின் சோஷியல் மீடியா ஐடியில் சென்று, 'சனாதனத்தை நீங்கள் என்ன செய்தாலும், யாரை வைத்தும் தமிழ்நாட்டில் வளர்க்க முடியாது. நீங்கள் அப்படி சொன்ன சில நாட்களிலேயே சட்டப்பேரவை பதிவேட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது பதிவாகிவிட்டது' என சொல்லி; ஏகத்துக்கும் கிண்டல் செய்துவருகிறார்கள். இப்போதைக்கு உள்ள நிலைமையை பார்த்தால் க்ரிஷ்ஷை யார் வந்து காப்பாற்றுவாரோ என பரிதாபமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
