விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது சங்கீதா இல்லையா?.. வேற யார் தெரியுமா?
சென்னை: விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அவர் இயக்கும் முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய்க்கு லைகா நிறுவனத்தின் பேனரில் படம் தயாரிப்பதற்கான வாய்ப்பு எப்படி வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். அவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் ஜேசன் போக்கிரி படத்தின் பாடலில் சில நொடிகளும், வேட்டைக்காரன் படத்தின் பாடலில் சில நொடிகளும் வந்து சென்றார். அதேபோல் சாஷாவோ தெறி படத்தின் க்ளைமேக்ஸில் தோன்றினார். எனவே ஜேசன் சஞ்சய்யும் கண்டிப்பாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது.
வெளிநாட்டில் படிப்பு: பள்ளி படிப்பை தமிழ்நாட்டில் முடித்த அவர் அடுத்ததாக கனடாவுக்கு சென்று சினிமா இயக்கம் சம்பந்தமான படிப்பை படித்து; தான் இயக்குநராகத்தான் ஆகப்போகிறேன் என்பதை உணர்த்தினர். மேலும் ட்ரிக்கர் என்ற குறும்படத்தையும் அவர் இயக்கினார். சூழல் இப்படி இருக்க லைகா நிறுவனத்தின் பேனரில் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
சந்தீப் கிஷன் ஹீரோ: இப்படி பல தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப்போகிறார் என்று சொல்லப்பட்டு பல மாதங்கள் ஆகியும் படத்தின் ஹீரோ யார் என்று யாருக்குமே தெரியவில்லை. மேலும் இந்தப் படம் அவ்வளவுதான் ட்ராப்பாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது போன்று ஹீரோ பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ: இதில் தம்பி இராமைய்யா, டூரிஸ்ட் ஃபேமிலி பட புகழ் குழந்தை நட்சத்திரமான கமலேஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவும் அண்மையில் வெளியாகி பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, அப்படியே விஜய் மாதிரி இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்து அதனை ட்ரெண்டாக்கினார்கள். அதேபோல் படத்தில் பணியாற்றுபவர்களும் ஜேசனின் வொர்க்கிங் ஸ்டைலை தாங்கள் கொடுக்கும் பேட்டிகளில் சிலாகித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் வாங்கி கொடுத்த வாய்ப்பு: இதற்கிடையே லைகா நிறுவனத்தின் பேனரில் படம் இயக்குவதற்கு சங்கீதாவும் அவரது தந்தையும்தான் வாய்ப்பு வாங்கி கொடுத்ததாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்தது சங்கீதாவோ அவரது தந்தையோ இல்லையென்றும்; மாறாக சங்கீதாவின் சகோதரிதான் இந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்ததாக பேசப்படுகிறது.
எப்படி வந்தது?: அதாவது சங்கீதாவின் சகோதரியும் லைகா சுபாஸ்கரனும் நெருங்கிய நண்பர்கள் என்றும்; சுபாஸ்கரனை லண்டனில் சந்தித்து ஜேசனிடம் அருமையான கதை இருக்கிறது; அதனை கேட்டு நீங்கள்தான் தயாரிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டதாகவும்; நட்புக்காக படம் தயாரிக்க சுபாஸ்கரன் முடிவு செய்துவிட்டதாகவும் திரைத்துறையில் இருப்பவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இதற்கிடையே மகனின் படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை விஜய் ஒரு வாழ்த்துகூட சொல்லாதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











