போஸ்ட் புரொடக்ஷனில் அறிமுகப் படம்.. தமிழ் வெப் தொடரில் நடிக்கிறார் ஜாமீனில் வெளிவந்த நடிகை!
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்துள்ள நடிகை சஞ்சனா, தமிழ் வெப்சீரிஸில் நடித்து வருவதாகக் கூறியுள்ளார்.
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு
இந்த வழக்கில், நடிகை ராகிணி திவேதி, செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

நிபந்தனை ஜாமீன்
ராகிணி, சஞ்சனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் சில முறை நிராகரிக்கப்பட்டன. இதனால் ராகிணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சஞ்சனாவுக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

சிறையில் இருந்து
மாதம் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் 3 மாத சிறை வாசத்துக்குப் பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தவிர்க்க வேண்டும்
வீட்டில் ஓய்வெடுத்து வரும் சஞ்சனா, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதாகவும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மீடியாவிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சோசியல் மீடியா
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா பக்கம் வராத அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்ஸ்டாவுக்கு வந்தார். ரசிகர் ஒருவர் அனுப்பிய போஸ்ட்டை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் அவர் ரசிகர் ஒருவர், தற்போது நடிக்க இருக்கும் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

தமிழ் வெப் சீரிஸ்
அதில், தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாகவும் இதன் ஷூட்டிங்கில் ஏற்கனவே கலந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழில் அறிமுகமாக இருக்கும் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும் அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











