For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவிஞர் வழங்கிய தேவரின் இசையமைப்பாளர்கள் - சங்கர் கணேஷ்

By Shankar
|

- கவிஞர் மகுடேசுவரன்

விசுவநாதன் இராமமூர்த்தியும் இளையராஜாவும் கோலோச்சிய திரையிசைக் களத்தில் சங்கர்-கணேஷ் என்னும் இரட்டையர்களை மறந்துவிட முடியாது. இது இன்னார் இசையமைத்த பாடல் என்பதை அறியாமலேயே சங்கர்-கணேஷின் பலப்பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். மென்னுணர்வுப் பாடல்களாயினும் சரி, வெறியாட்டப் பாடல்களாயினும் சரி... சங்கர்-கணேஷ் இசைத்தவற்றில் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

'நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்... இசை வெள்ளம் நதியாக ஓடும்...,' என்ற பாடலைப்போல் மனத்தை உருக்கும் மென்பாடல் இருந்துவிட முடியுமா?

Sankar Ganesh, Legendary Musician

'பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல்போலே முன்னால் போனாள்...' என்கின்ற பாடலை மிஞ்சிய ஆட்டப்பாடலைக் கேட்டிருக்கிறோமா? கூறுவது கடினம்தான். அவை சங்கர்-கணேஷ் இசையமைத்த பாடல்கள். சங்கர்-கணேஷ் இரட்டையராக நானூறு படங்களுக்கும், சங்கர் இல்லாமல் கணேஷ் மட்டுமே அறுநூற்றைம்பது படங்களுக்கும் என்று மொத்தம் ஆயிரத்து ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். இது மலைக்க வைக்கும் செய்தி. வெள்ளிக்கிழமை தவறாமல் ஜெய்சங்கர், இரவிச்சந்திரன் நடித்த படங்கள் வெளியான காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத விரைவில் ஒரு படத்திற்கான இசையமைப்பைச் செய்து தரவேண்டிய கட்டாயம் இருந்தது. அதைச் செய்து கொடுத்தவர்கள் அவர்கள்.

இசையமைப்பாளர்களில் கணேஷைப்போல் நகைச்சுவை உரையாற்றல் உள்ளவர் யாருமே இல்லை எனலாம். ஒரு நிகழ்ச்சியை அவர் சொன்னால் நாம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். சென்னை மண்ணின் மைந்தரான கணேஷுக்கு வயிறு வலிக்கும்படி சிரிக்கவைத்துப் பேசும் கலை எளிதில் கைவந்திருக்கிறது. பதிவுக் காணொளிகளில் காண்பதைவிட அவர் நேரில் சொல்லும்போது கேட்பது இன்னும் சுவையாக இருக்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் படப்பிடிப்பில் கணேஷ் பேசுவதை நேரில் கேட்டுச் சிரித்திருக்கிறேன். பல்கலை வித்தகரான கணேஷ் ஒரு நடிகரும் ஆவார், இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். 'செப்புக்குடம் தூக்கிப்போற செல்லம்மா...,' பாடலில் கணேஷ் தோன்றுவதைப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில்தான் இசையமைப்பாளர்கள் திரையில் தோன்றுவது அரிதானதே தவிர, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நடிகராவதற்கு முதற்றகுதி பாடத் தெரிந்திருக்கவேண்டும் என்பதே. குரல்பதிவு, பாடல்பதிவின்பின் வாயசைப்பு போன்ற வாய்ப்புகள் வந்த பிறகே பாடத் தெரியாத நடிகர்களுக்கு வாழ்க்கை வந்தது.

Sankar Ganesh, Legendary Musician

'இசை கவிஞர் வழங்கிய தேவரின்' என்று தலைப்பில் குறிப்பிடப்படுவதைப் பார்த்திருக்கலாம். தொடக்கக் காலத்தில் விசுவநாதன் வீட்டு வாயிலில் சங்கரும் கணேஷும் சென்று நின்று தவங்கிடந்து தம்மை உதவியாளராக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றனர். பிறகு சங்கர் விசுவநாதனிடமும், கணேஷ் ஜிகே வெங்கடேஷிடமும் பணியாற்றினர். பிற்பாடு இருவரும் விசுவநாதனிடமே சேர்ந்தும் பணியாற்றியுள்ளனர். அவ்வமயம் கண்ணதாசனோடு ஏற்பட்ட தொடர்பால் அவரிடம் இசையமைப்பாளர் வாய்ப்பு பெற்றுத் தரக் கோரினர். கண்ணதாசன் இரண்டு படங்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளார். அவை வெளியாகவில்லை. மீண்டும் கவிஞரிடம் வேண்டியபோது அவர் தேவரிடம் பரிந்துரைத்தார். தேவர் தயாரிப்பில் வெளியான 'மகராசி' என்ற படம் வெளியாகிறது. அந்த நன்றியுணர்ச்சியால் தலைப்பில் அவ்வாறு குறிப்பிடக் கேட்டுக்கொண்டார்கள். கண்ணதாசனால் திரையுலகில் வாழ்க்கை பெற்றவர்கள் எண்ணற்றோர் இருக்க வேண்டும். எழுத்தும் சொல்லும் மனமும் ஒன்று என்று வாழ்ந்து சென்றிருக்கிறார் அவர்.

'ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தாள்....' என்னும் பாட்டு இதயத் தாமரை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடலுக்கு இசைத்தவர் இளையராஜா என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பிசி ஸ்ரீராமின் உதகைப்புறத்து ஒளிப்பதிவில் அத்தகைய மயக்கத்தை அடைந்தது நியாயம்தான். ஆனால், அப்படத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ். வண்டிச் சக்கரம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தேவி வந்த நேரம்... செல்வம் தேடாமல் தானாகச் சேரும்' என்ற பாடலில் இழையும் ஆண் பெண் குரல்களில் மயக்கும் வசியம் பொதிந்திருக்கும்.

Sankar Ganesh, Legendary Musician

'கல்லான நெஞ்சங்கள்கூட

இளம்பெண்ணாலே பூவாக மாறும்...' என்ற வரிகள் இடம்பெற்ற 'தனிமையிலே ஒரு ராகம்' என்னும் சட்டம் ஒரு இருட்டறையின் பாடல் என் மிகுவிருப்பங்களில் ஒன்று. 'யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது...?' என்னும் பாடல் பெண்குரல் பாடல்களில் கொடுமுடி தொட்ட ஒன்று. இதைவிடவும் 'மெதூஉவாகச்' செல்லும் வேறு பாடல் நினைவிருந்தால் சொல்லுங்கள். 'ஓ... நெஞ்சே... நீதான் பாடும் கீதங்கள்...' என்னும் குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய பாடல் மனத்தைத் தீண்டும் மற்றொரு மயிற்பீலி. 'இரண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்...' என்னும் சிவப்பு மல்லிப் பாடல் வைரமுத்துக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. 'பனித்தென்றல் காற்றே வா... இந்த மலரோடு விளையாடவா...' என்று ஒரு பாட்டு இருக்கிறது. ஒருநாள் அந்தப் பாடலைக் கேட்டேன். பல நாள்கள் அப்பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருந்தேன்.

சங்கர்-கணேஷ் இசைத்தவற்றில் நாட்டுப்புறப் பாடல்களும் சிறப்பானவை. கன்னிப் பருவத்திலே திரைப்படத்தில் இடம்பெறும் 'நடையை மாத்து...' பாடலில் இடம்பெறும் கொட்டுகள் கேட்போரை எழுந்தாட வைக்கும். பதினாறு வயதினிலே திரைப்படத்தை எடுத்த முதலாளியான எஸ்.ஏ. ராஜ்கண்ணு 'சின்ன சின்ன வீடு கட்டி' என்னும் படத்தை எடுத்தார். அப்படத்தில் ஒரு பாடல் : 'நாக்குல மூக்குல நத்துப்புல்லாக்குல பேச்சுப் பாராக்குல தா(ழ்)வாரத்துல செவரோரத்துல சிங்காரத்துல....' என்று அடுக்கிக்கொண்டே போகும். அருமையான பாடல். 'நீ இல்லாமலே இனி என் வாழ்விலே ஒரு திருநாளையும் காண முடியாதையா... நம் உறவானது என்றும் நிலையானது' என்று வாணி பாடும்போது நமக்குள் ஒரு நெகிழ்ச்சி தோன்றும்.

என் சிறுவத்தில் 'செப்புக்குடம் தூக்கிப்போற செல்லம்மா...' பாடலில் வரும் சில வரிகளைக் கேட்டபடி பக்கத்து வீட்டு அண்ணன் கண் கலங்கியது ஏனென்று அன்று விளங்கவில்லை. இன்று நன்கு விளங்குகிறது. 'படுத்தா உறக்கம் வல்ல... பாய்விரிச்சா தூக்கமில்ல... பழைய உறவுக்காரி பாதையில கண்டுக்கிட்டு.... சந்தனக் கும்பாவில சாதம்போட்டு உண்கையில உங்களை நினைக்கையிலே உண்ணுறது சாதமில்ல...' அந்தக் கண்கலங்கலுக்குக் காரணம் இன்று விளங்குகிறது.

Sankar Ganesh, Legendary Musician

ஒவ்வோர் இசையமைப்பாளர்க்கும் தனித்த பெண்குரல் ஒன்று அமைந்தது. விசுவநாதனுக்குச் சுசீலாவும் இளையராஜாவுக்கு ஜானகியும் அமைந்தாற்போல் சங்கர்-கணேஷுக்கு வாணி ஜெயராம் அமைந்தார். 'மேகமே மேகமே... பால் நிலா தேயுதே....' என்னும் பாடலை வேறு குரலில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அப்படியொரு கனத்த துயரம் வழிகின்ற குரல். இணைப்பாடல்களில் வாணிக்கு முதிராச் சிறுமியின் முகைக்குரல். பெயருக்கேற்றதுபோல் அவர் கலைவாணியேதான். அந்தக் குரலைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்காகவே சங்கர்-கணேஷ் நன்றிக்குரியவராகின்றார்கள்.

சென்னையில் பிறந்து வளர்ந்த பலரிடம் குணக்குற்றமில்லாத பெருந்தன்மையைப் பார்த்திருக்கிறேன். இசையமைப்பாளர் கணேஷ் பெருந்தன்மையின் மொத்த உருவம்போல் தோன்றுகிறார். என்னதான் சொல்லுங்கள், ஒருவர்க்குக் கைவருகின்ற கலை கலைமகள் அருளாகவும் இருக்கலாம். கருவிலே திருவாகவும் இருக்கலாம். பயின்றதால் முதிர்ந்த கனியாகவும் இருக்கலாம். அந்தக் கலை மக்களை எவ்வளவு மகிழ்வித்தது, எவ்வளவுக்கு நினைக்கப்படுகிறது என்பதே இறுதியானது. சங்கர்-கணேஷ் இசைக்கோத்த பாடல்கள் மக்களை மகிழ்வித்தன. தயாரிப்பாளர்களை வாழவைத்தன. இன்றும் கேட்கப்படுகின்றன. அப்பாடல்கள் காற்றுள்ளவரை என்றைக்கும் உலவிக்கொண்டிருக்கும்.

English summary
Poet Magudeswaran's write up on Legendary Music director Sankar Ganesh/
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more