மனுஷம்யா.. உருக்கமாக கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்.. மனிதாபிமானத்துடன் ஒப்புக்கொண்ட நடிகர் சந்தானம்
சென்னை: தயாரிப்பாளரின் கோரிக்கையை ஏற்று நடிகர் சந்தானம், சம்பள பாக்கி வாங்காமல் ஓடி ஓடி உழைக்கணும் படத்தை முடித்துக் கொடுக்க சம்மதித்துள்ளார்.
சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் மற்றும் டகால்டி ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதாக இருந்தது. இரு படக்குழுவினரையும் அழைத்து இயக்குனர் பாரதிராஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.
சமரசம் செய்து வைத்ததை அடுத்து டகால்டி முதலில் ரிலீஸ் ஆனது. சர்வர் சுந்தம் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

வேண்டுகோள்
அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினருமான கே.ராஜன், 'நடிகர் சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள். அவர் ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அந்த தயாரிப்பாளருக்கு தற்போது உடல்நிலை மோசமாக இருக்கிறது.

3 மடங்கு வட்டி
டயாலிசிஸ் செய்து வருகிறார். அவர் சினிமாவை நேசிக்கும் தயாரிப்பாளர். அவருக்கு சினிமாவை விட்டால் வேறு தொழில் தெரியாது. அவர் நிமிர்ந்து நில் படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து சிக்கலில் மாட்டிக்கொண்டார். ஓடி ஓடி உழைக்கணும் படத்துக்கு வட்டிக்கு வாங்கிதான் சந்தானத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தார். அந்த வட்டியே மூன்று மடங்காகி விட்டது.

தர்மம்தான் நிலைக்கும்
காசு பணம் பெரிதல்ல, நாம் ஒவ்வொருவரும் செய்யும் தர்மம்தான் நிலைக்கும். இந்த படத்திற்கு தற்போது எந்த காசும் வாங்கிக்கொள்ளாமல் சந்தானம் நடித்துக் கொடுத்துவிட்டு, படம் ரிலீஸின் போது முழு தொகையையும் வாங்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். அவர் என்னைவிட சிறியவர் என்றாலும் பாதம்தொட்டு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார்.

சம்பளப் பாக்கி
இந்நிலையில் நடிகர் சந்தானம், இப்போது இந்தப் படத்தில் சம்பளப் பாக்கியை வாங்காமல் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி தயாரிப்பாளர் கே.ராஜனிடம் அவர் கூறியுள் ளார். இதையடுத்து அவரை கே.ராஜன் மற்றும் தயாரிப்பாளர்கள் சிலர் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர். இதையடுத்து இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

அமைரா தஸ்துர்
இந்தப் படத்தை வாசன் விஷூவல் வென்சர்ஸ் சார்பாக, கே.எஸ்.ஶ்ரீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கின்றனர். மணிகண்டன் இயக்குகிறார். சந்தானம் ஜோடியாக அமைரா தஸ்துர் நடிக்கிறார். மற்றும் சலீம் கோஸ், கோவை சரளா, ஆனந்தராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











