புதுச்சேரியில் தில்லுக்கு துட்டு 2 பார்க்க வந்தவர்களுக்கு துணிப்பை கொடுத்த சந்தானம் ரசிகர்கள்
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை செய்யப்பட உள்ள நிலையில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சந்தானம் நடிப்பில் வெளிவந்துள்ள தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகம் படத்தை பார்க்க வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு துணிப்பைகளை கொடுத்தனர் அவரின் ரசிகர் மன்றத்தினர்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியிலும் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையாகன பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கும் தன்மையுள்ள, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது. மேலும் இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகம் புதுச்சேரியில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ராஜா திரையரங்கில் புதுச்சேரி மாநில சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில் சந்தானத்தின் பேனருக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும், மாநில அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப் போவதால், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எளிதில் மக்கும் துணிப் பைகளை தில்லுக்கு துட்டு திரைப்படத்தை காண வந்தவர்களுக்கு வழங்கினர் சந்தானத்தின் ரசிகர்கள்.
நடிகர்களின் ரசிகர்கள் என்றாலே தங்களுக்கு பிடித்த நடிகர்களின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதும், ஆட்டம் பாட்டம் என்ற நிலை மாறி, இதுபோன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ரசிகர்களின் செயல் பாராட்டுக்குரியதே.


Click it and Unblock the Notifications











