நான் ஆன்மீகவாதிதான்.. புரிந்துகொண்டதால் வடக்குப்பட்டி ராமசாமி வெற்றி.. சந்தானம் ஓபன் டாக்
சென்னை: நடிகர் சந்தானம் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படம் வெற்றி பெற்றதன் காரணமாக ரசிகர்களுக்கு படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது சந்தானம் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாத்திருக்கின்றன.

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் அண்மையில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.
வடக்குப்பட்டி ராமசாமி: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு கிக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனையொட்டி படத்திலிருந்து சில நொடிகள் ஓடக்கூடிய க்ளிம்ப்ஸ் காட்சி ஒன்று வெளியானது. அதில் சந்தானத்தை பார்த்து ஒருவர், கடவுள் இல்லைனு சொல்லிட்டு ஊருக்குள்ள ஒருத்தர் சுத்துனாரே அந்த ராமசாமியா நீ என்று கேட்கும்படி இருந்தது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டீசண்ட் வரவேற்பு: படமானது சமீபத்தில் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் சந்தானத்துக்கு இந்தப் படம் ஹிட் வரிசையில் இணைந்துவிட்டதாகவும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. அப்போது பேசிய சந்தானம், "வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நான் ஹீரோ என்றாலும் அனைவருமே சிறப்பாக நடித்து சிரிக்க வைத்தார்கள்.

கடவுள் நம்பிக்கையை வைத்து படம் பார்க்க வேண்டாம்: ஆத்திகராக பார்த்தால் இது சாமி படம். நாத்திகராக பார்த்தால் இது பகுத்தறிவு பேசும் படம். கடவுள் நம்பிக்கையை வைத்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்பதையும்; கடவுள் பெயரை வைத்து அரசியலும் பண்ண வேண்டாம் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. நான் ஆன்மீகவாதிதான். எங்களது கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. காமெடியும் சிரிப்பும் அவர்களுக்கு தேவைப்படுகிறது. அடுத்த படமும் இந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். அதற்கும் கவுண்டமணி வசனத்தையே தலைப்பாக வைத்திருக்கிறோம்" என்றார்.
சந்தானம் விளக்கம்: முன்னதாக, பெரியாரை கிண்டலடித்து வெளியான காட்சி தொடர்பாக விமர்சனம் எழுந்தபோது, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் படத்தை வெளியிடுவதிலிருந்து பின்வாங்கியது. இதனையடுத்து நடிகர் சந்தானம் இவ்விவகாரம் குறித்து அளித்த விளக்கத்தில், "படத்தின் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறியது. எதற்கும் பயப்பட வேண்டாம். இதெல்லாம் படத்துக்கான ப்ரோமோஷன் என நினைத்துக்கொள்வோம் என்று தயாரிப்பாளரிடம் நான் சொன்னேன். நானும் இயக்குநர் கார்த்திக்கும் கவுண்டமணியின் ரசிகர்கள். அதனால்தான் அவரது முதல் பட தலைப்பு டிக்கிலோனா. இப்போது வடக்குப்பட்டி ராமசாமி" என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











