கதாநாயகன் மட்டுமல்ல.. காமெடியையும் தொடர்வேன்! - சந்தானம் கற்றுக் கொண்ட பாடம்
சந்தானத்தின் போக்கில் திடீர் மாற்றம்.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்குக் கிடைத்த 'வரவேற்பு', நடித்தால் இனி ஹீரோதான் என்ற அவரது மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
ஆம்.. இனி வழக்கம்போல, ஹீரோக்களின் காதலுக்கு துணை போகும் காமெடியன் வேஷத்தையும் தொடரப் போகிறாராம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆடியோ விழாவில், என்னை நம்பித்தான் நான் இருக்கிறேன். எத்தனை நாள்தான் ஹீரோக்களுக்கு நண்பனாகவே வருவது. இனி நானே ஹீரோவாக நடிக்கப் போகிறேன், என்றெல்லாம் பேசினார்.
ஆனால் படம் வெளியான பிறகு, எதிர்ப்பார்த்த பெரிய வெற்றி கிடைக்கவில்லை. சுமார்தான் என்று விமர்சனங்கள் வெளியானதால், அவரும் படக்குழுவினரும் ஒவ்வொரு ஊராகப் போய், அரங்குகளில் தோன்றி, மக்களை படம் பார்க்க ஈர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் கோவையில் திரையரங்குகளுக்கு விசிட் செய்த சந்தானத்திடம், கதாநாயகன் ஆகிவிட்டதால் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தீர்களே... என்று கேட்கப்பட்டது.
உடனே, "கண்டிப்பாக காமெடி கதாபாத்திரத்திலும் நடிப்பேன். எனக்கு ஏற்ற நல்ல கதை வந்தால் அதில் கதாநாயகனாகவும் நடிப்பேன், என்றார்.
மேலும் நான் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் வாழ்த்துச் சொன்னதாகவும் கூறினார்.


Click it and Unblock the Notifications











