சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’: இசை ‘கொலைவெறி’ அனிருத்
சென்னை: சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ள 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்திற்கு 'கொலைவெறி' அனிருத் இசை அமைக்க உள்ளார்.
தனது வித்தியாசமான காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சந்தானம், தற்போது மீண்டும் ஹீரோவாக அரிதாரம் பூசுகிறார்.
இவர் ஏற்கனவே, அறை எண் படத்தில் ஏறக்குறைய ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

சந்தானம் ஹீரோ...
காமெடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பெயர், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.

மரியாதை ராமண்ணா...
இப்படம் தெலுங்கில் வெற்றி நடை போட்ட ‘மரியாதை ராமண்ணா' படத்தின் தமிழ் ரீமேக். தெலுங்கில், காமெடி நடிகர் சுனில் ஹீரோவாகவும், சலோனி ஹீரோயினாகவும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

தமிழிலும் வசூல் வேட்டையா?
'நான் ஈ' எஸ்.எஸ்.ராஜமெளலி இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இப்படம் இந்தி, கன்னடம், பெங்காலியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளையும் வசூலில் சாதனை படைத்ததால், தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப் போகின்றனர்.

முத்திரை படைத்த இயக்குநர்...
பிவிபி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, 'உன்னாலே உன்னாலே', 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார். இவர் மறைந்த இயக்குனர் ஜீவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 'முத்திரை' இவரது முதல் படைப்பு.

அனிருத் இசையில்...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு 'கொலவெறி' அனிருத் இசையமைக்கிறார். நாயகி தேர்வு நடை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











