அந்த சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் சந்தானம்.. சத்தமில்லாமல் முடிவடைந்த 80% படப்பிடிப்பு!
சென்னை: ஆடை பட இயக்குநர் ரத்னகுமாருடன் அடுத்ததாக நடிகர் சந்தானம் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியான நிலையில், சத்தமே இல்லாமல் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படம் ஒன்றின் ரீமேக்கிலும் நடிகர் சந்தானம் நடித்து வருகிறாராம்.
கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தெலுங்கில் வெளியான ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா
இயக்குநர் ஸ்வரூப் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா மற்றும் ஷ்ரெத்தா ராஜகோபாலன் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா. வெறும் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது அந்த படம்.

தெலுங்கு பட ரீமேக்
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். கடந்த பிப்ரவரி மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

80 சதவீதம்
வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் மற்றும் ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் 80 சதவீதம் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த படத்தை முடித்து விட்டு அடுத்த படத்திற்கு சந்தானம் செல்ல தயாராகி வருகிறாராம்.

ஆடை இயக்குநர் படத்தில்
மேயாத மான், ஆடை என இரு படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்திற்கும் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் அடுத்ததாக சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றை விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











