Santhanam: அஜித் -விக்னேஷ் சிவன் கூட்டணியில் நல்ல கேரக்டர் இருந்துச்சு.. சந்தானம் வருத்தம்!
சென்னை: நடிகர் அஜித்தின் ஏகே62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருந்தது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த ப்ராஜெக்ட் நிறுத்தப்பட்டு, தற்போது அஜித்தின் இந்தப் படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஜித் -விக்னேஷ் சிவன் படத்தில் மிஸ்ஸான கேரக்டர் குறித்து சந்தானம் வருத்தம்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது ஏகே62 படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். படத்தில் அவருக்கு நயன்தாரா ஜோடியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த படம் ட்ராப் ஆனது. விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்ட் தயாரிப்பு தரப்பு மற்றும் அஜித்திற்கு திருப்தியை அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து ஏகே62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கவிருந்த நிலையில், தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது.
இந்த ஆண்டின் தீபாவளி ரிலீசாகவே இந்தப் படம் வெளியாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் சூட்டிங் துவங்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டு ரிலீசாகத்தான் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படம் குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன், படம் மகிழ்திருமேனி ஸ்டைலில் அஜித்தின் படமாக அமையும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவிருந்த படம் குறித்து நடிகர் சந்தானம் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அந்தப் படத்தில் தான் கமிட்டாகியிருந்ததாகவும், காமெடி மற்றும் சீரியஸ் என அந்தக் கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் அந்தப் படத்தில் நடிக்க தான் ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தில் வித்தியாசமான சந்தானத்தை ரசிகர்கள் பார்த்திருக்கலாம் என்று கூறிய சந்தானம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் ட்ராப் ஆகியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். வரும் 28ம் தேதி சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷன்களில் மும்முரமாக ஈடுபட்டுவரும் சந்தானம், பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











