டிக்கிலோனா.. ஆட்டத்தை ஆரம்பித்த சந்தானம்.. ஒண்ணே கஷ்டம்.. இதுல 3 வேற.. நம்ம வயிறு தாங்குமா?
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா.
சென்னை: சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. பிரபல திரைக்கதை ஆசிரியர் கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படத்தில் நடித்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் நடித்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடிக்கிறார்கள். பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் தலைப்பு வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது. அதேபோல் படத்தின் டெக்னிக்கல் டீமும் சிறப்பாக அமைந்துள்ளது. இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களத்தில் இருப்பதால் படத்தின் பின்னணி இசை பாடல்கள் பற்றிச் சொல்லத்தேவை இல்லை.
மிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. பூஜையில் படத்தின் நாயகன் சந்தானம், நாயகிகள் அனகா, ஷிரின், தயாரிப்பாளர்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ், சோல்ஜர் பேக்டரி சினிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications











