Santhanam On Simbu - சிம்பு இப்படி மாறுவார்னு நினைச்சுக்கூட பார்க்கல.. அதிர்ச்சியான சந்தானம்
சென்னை: Santhanam (சந்தானம்) சிம்பு இவ்வளவுக்கு மாறுவார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லையென சந்தானம் தெரிவித்திருக்கிறார்.
லொள்ளு சபாவில் நடித்து புகழ்பெற்ற சந்தானம் மன்மதன் படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட சந்தானம் தனது காமெடி திறமையை காண்பித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். குறிப்பாக வடிவேலு கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தபோது ஏற்பட்ட வெற்றிடத்தை சந்தானம் மட்டும்தான் நிரப்பினார்.

பல படங்கள்: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, வீரம், பில்லா, என்றென்றும் புன்னகை, பொல்லாதவன், குசேலன் என பல படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் அவரது டைமிங் கவுண்ட்டர்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக சந்தானம் இல்லாத படம் இல்லை என்ற நிலைமை உருவானது.
ஹீரோ சந்தானம்: நகைச்சுவை ட்ராக்கில் தனிக்காட்டு ராஜாவாக சென்று கொண்டிருந்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் ஹீரோவாகவே நடித்துவருகிறார். ஆனாலும் ஒரு படம் கூட சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு அமையவில்லை. இந்தச் சூழலில் அவர் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான புரோமோஷன் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
சந்தானத்தின் பேட்டி: அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு குறித்து பேசிய சந்தானம், "நான் சினிமாவுக்கு வந்ததற்கு காரணம் சிம்புதான். டெலிவிஷனில் இருந்து என்னை மன்மதன் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி அன்பே ஆருயிரே படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் அவர்தான் பெற்றுக்கொடுத்தார்.
எங்ககூடவும் நடிக்கலாம்: அதன் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தேன். அவருடனும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தேன். ஹீரோ ஆனால் என்ன ஒருபக்கம் எங்ககூடவும் படம் பண்ணலாமே என்று சிம்பு சொன்னார். முன்பெல்லாம் நானும், அவரும் சந்தித்துக்கொள்ளும்போது ஜாலியான பல விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் இப்போது ஆன்மீகம் குறித்து பேசுகிறார்.
நினைத்துக்கூட பார்க்கவில்லை: சிம்புவுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சித்தர்கள், சாமியார்களை சந்திப்பது, திருவண்ணாமலை போகும் அளவுக்கு அவர் மாறுவார் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்றார். சிம்பு இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்க கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சில பிரச்னைகளால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த சிம்பு ஈஸ்வரன் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அதன் பிறகு அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் சிறப்பாக ஓடின.


Click it and Unblock the Notifications











