Santhanam Net Worth: 44 வயதில் இத்தனை கோடி சொத்து இருக்கா?.. வசதியான ராமசாமி தான் நம்ம சந்தானம்!
சென்னை: நடிகர் சந்தானம் இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். சிம்புவின் வல்லவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக வளர்ந்த சந்தானம் சில வருடங்களிலேயே நம்பர் ஒன் காமெடியனாக பல நடிகர்கள் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.
நான் ஈ படத்திற்காக ராஜமௌலி சந்தானத்தின் கால்ஷீட்டை எதிர்பார்த்து காத்திருந்த வரலாறுகளும் உண்டு. அறை எண் 305-ல் கடவுள் படத்தில் கதையின் நாயகனாக மாறிய சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமேல் இப்படித்தான் என காமெடியனில் இருந்து ஹீரோவாக உருவெடுத்தார்.

ஹேப்பி பர்த்டே சந்தானம்: 1980-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் சந்தானம். விஜய் டிவியில் வெளியான லொள்ளு சபா நிகழ்ச்சியில் புதிய படங்களை நையாண்டி செய்து நடித்து வந்த சந்தானம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் காமெடியனாக உயர்ந்தார். காமெடி நடிகர்கள் ஹீரோவாக அப்கிரேட் ஆகி வரும் வரிசையில் சந்தானமும் ஹீரோவாக மாறினார். இன்று தனது 44 வது பிறந்தநாளை நடிகர் சந்தானம் கொண்டாடி வருகிறார்.
வடக்குப்பட்டி ராமசாமி வருது: வரும் பிப்ரவரி 2-ம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரசிகர்களுக்காக வெளியிட காத்திருக்கிறார். சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது. கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை சந்தானமே பாடியுள்ளார்.
வெற்றியும் தோல்வியும்: காமெடியனாக நடித்த போது சந்தானத்துக்கு தோல்வியே கிடையாது என்பது போல பல படங்கள் ஹிட் அடித்து வந்தன. ஆனால், ஹீரோவான பின்னர் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், அதே ஆண்டு வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
சொத்து மதிப்பு: நடிகர் சந்தானம் 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்தார். ஹாசினி, நிபுன் என இரு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் சந்தானத்திற்கு சொந்தமாக சொகுசு வீடு ஒன்று உள்ளது. மேலும், சில சொகுசு கார்களையும் சந்தானம் வைத்திருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் சந்தானம் ஒரு படத்துக்கு 14 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 70 முதல் 80 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரராக வசதியான ராமசாமியாகவே வாழ்ந்து வருகிறார் சந்தானம் என்கின்றனர்.
ஆன்மிகத்தில் ஆர்வம்: ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறார் சந்தானம். ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கும் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் கையில் சூலாயுதம் எல்லாம் வைத்துக் கொண்டு நெற்றியில் பெரிய பட்டையெல்லாம் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











