DD Next Level: ஏப்ரல் மாதம் வடிவேலு, மே மாதம் சந்தானம்.. டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: காமெடி நடிகராக சந்தானம் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் வலம் வந்த நிலையில், இதற்கு மேல் ஹிரோ ஆகலாம் என்கிற முடிவுடன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு வசூல் ரீதியாக வெற்றி படங்களாக அமைந்தன.
அதில், தில்லுக்கு துட்டு சீரிஸ் படங்கள் சந்தானத்துக்கு ஜாக்பாட் வெற்றிகளை கொடுத்தன. டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியாகி பேய் ஹிட்டு அடித்தது. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான படங்கள் சொதப்பய நிலையில், ஆர்யா தயாரிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் ரிலீஸ் தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக நடிகர் சந்தானம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். வரும் சம்மருக்கு சந்தானமும் தனது பங்குக்கு சிக்ஸர் விளாச முடிவு செய்துள்ளார்.
ஏப்ரலில் வடிவேலு: சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு, சுந்தர். சி, கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில், வெளியான அந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. பல வருடங்கள் கழித்து வடிவேலு ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு ரசிகர்களை சிரிக்க வைக்க தயாராகிவிட்டார்.
மே மாதம் சந்தானம்: ஏப்ரல் மாதம் வடிவேலு ரசிகர்களை சிரிக்க வைக்க ரெடியாகிவிட்ட நிலையில், மே மாதம் 16ம் தேதி சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது சந்தானம் அறிவித்துள்ளார். பேய் படமாக உருவான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் அடுத்த பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். கெளதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

4 பேய்களும் 4 ஆயிரம் பிரச்சனைகளும்: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகர் சந்தானம் அதற்கு கேப்ஷனாக 4 பேய்களும் 4 பிரச்சனைகளும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். கையில் கோடரி வைத்துக் கொண்டு சிக்ஸர் அடிப்பது போல போஸ் கொடுக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறும் பந்தில் மே 16 என ரிலீஸ் தேதியை டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் காமெடியன்: வடிவேலு மீண்டும் காமெடியனாக நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், சந்தானமும் மீண்டும் சிம்பு படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்திலும் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத கஜ ராஜா வெற்றிக்கு காரணம்: சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சோனு சூட், மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 12 வருஷத்துக்கு முன்பாக உருவான மத கஜ ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி 50 கோடிக்கும் மேல் வசூல் ஈட்ட முக்கிய காரணமே சந்தானத்தின் காமெடி தான் எனக் கூறப்பட்டது. மீண்டும் அவர் பழையபடி காமெடியனாக மாறினால் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் தமிழ் சினிமாவில் குவியும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











