Vijay: ”விஜய்யின் நேர்மை பிடிச்சிருக்கு... அவருக்காக செய்வேன்..” சந்தோஷ் நாராயணன் கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற விஜய்யின் அரசியல் கட்சிக்கு திரையுலகிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
விஜய்க்காக களமிறங்கும் சந்தோஷ் நாராயணன்
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். பா ரஞ்சித்தின் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், ரஜினி, விஜய், விக்ரம் உட்பட பல முன்னணி ஹீரோக்களுக்கும் ட்யூன் போட்டுள்ளார். விஜய்யுடன் பைரவா படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சந்தோஷ் நாராயணன் மனம் திறந்துள்ளார்.

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், சினிமாவில் இருந்து விலகி இனி அரசியலில் பயணிக்க உள்ளதாக அறிவித்துவிட்டார். அதன்படி, கோட், தளபதி 69 படங்களுக்குப் பின்னர் 2026 தேர்தலில் போட்டியிடுவதே விஜய்யின் நோக்கமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய், அடுத்தடுத்து தனது கட்சியின் நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை மதுரை அல்லது திருநெல்வேலியில் நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் சந்தோஷ் நாராயணனும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசியுள்ளார். சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி என்ற இசை நிகழ்ச்சி நாளை (பிப் 10) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்காக செய்தியாளர்களை சந்தித்த சந்தோஷ் நாராயணன், இதில் என்னுடைய பாடல்கள் மட்டுமின்றி யுவன், ஜி.வி. பிரகாஷ், அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையில் நான் பாடிய பாடல்களையும் பாட உள்ளதாக கூறினார். மேலும், விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. சமீபத்தில் இந்தியாவில் மொபைல் புரட்சி ஏற்பட்டது. இதுபோல ஒரு புரட்சியாளர் வந்ததால் தொலைத்தொடர்பு உலகமே மாறியது. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் நேர்மை அரசியலிலும் இருந்தால், அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சந்தோஷ் நாராயணன், விஜய்யின் கட்சிப் பாடலை உருவாக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அதனை முழு மனதுடன் செய்வேன். விஜய்யின் கொள்கையை பொறுத்து அவரின் ஓட்டு தீர்மானமாகும் என கூறினார். விஜய்யின் அரசியல் பயணத்துக்காக சந்தோஷ் நாராயணன் பாடலுக்கு இசையமைத்து தர ரெடியாகிவிட்டது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











