அந்தாதுன் ரீமேக்.. சிம்ரனை அடுத்து படத்தில் இணைந்த பிரபல இசை அமைப்பாளர்.. ஜனவரியில் ஷூட்டிங்!
சென்னை: அந்தாதுன் தமிழ் ரீமேக்கிற்கு பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
இந்தியில், அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், அந்தாதுன்.
இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்றது இந்தப் படம்.

பியானோ மாஸ்டர்
இதன் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் பெற்றுள்ளார். அவரே தயாரிக்கிறார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக, உடல் எடையை அவர் குறைத்துள்ளார், பிரஷாந்த். இந்தப் படத்தில் பியானோ மாஸ்டராக அவர் நடிக்கிறார். படத்தை மோகன் ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

மோகன் ராஜா
பல தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, இதையும் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், படத்தில் இருந்து அவர் விலகினார். இப்போது, கீர்த்தி சுரேஷ் நடித்து அமேசானில் ரிலீஸ் ஆன, பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜெ.ஜெ.பிரட்ரிக் இயக்குகிறார்.

நெகட்டிவ் சாயல்
இதில் நடிகர் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கிறார். படத்தில் தபு நடித்த கேரக்டர் நெகட்டிவ் சாயல் உள்ளது. அந்த கேரக்டரில் நடிக்க வைக்க பலரிடம் பேசி வந்தனர். பின்னர் சிம்ரன் நடிப்பது உறுதியானது.

சிறப்பான தேர்வு
இந்நிலையில், இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை நடிகர் தியாகராஜன் உறுதிப்படுத்தியுள்ளார். 'இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் சிறப்பான தேர்வு. ராதிகா ஆப்தே கேரக்டரில் நடிக்கும் நடிகை கிட்டத்தட்ட முடிவாகிவிட்டார். புதுச்சேரி பின்னணியில் இதன் கதை நடக்கிறது. ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது' என்றார்.


Click it and Unblock the Notifications











