அம்மாவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பண்ண வைரல் சேட்டை.. ‘வா வாத்தியார்’ பாடல் டிரெண்டாகுதே!
சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. டீசர், பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது தாயாருடன் இணைந்து பாடிய ஒரு பாடல் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாடலை அவர் ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளார்.

இந்த வீடியோவைக் கண்ட நடிகர் கார்த்தி, சந்தோஷின் தாயாருக்கு வாழ்த்து தெரிவித்தார். நாயகி க்ரித்தி ஷெட்டி "வாவ் சூப்பர்" எனப் பாராட்டியுள்ளார். சித்தார்த், அதிதி ராவ், தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்தனர். கார்த்தி எம்.ஜி.ஆர். ரசிகராக நடிப்பதாக தகவல் உள்ளதால், இந்த ரீமிக்ஸ் படத்திலும் வருகிறதா என ரசிகர்கள் ஆவலுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"வா வாத்தியார்" அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஈர்த்தது. வித்தியாசமான களங்களில் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் கார்த்தியும், தனித்துவ இயக்குநரான நலன் குமாரசாமியும் இணையும் இக்கூட்டணி, படத்தின் மீதான ஆர்வத்தை பன்மடங்கு பெருக்கியுள்ளது. இந்த கூட்டணியின் மேஜிக்கை திரையரங்கில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், க்ரித்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலை: டி. ஆர். கே. கிரண், படத்தொகுப்பு: வெற்றி, சண்டைக் காட்சிகள்: அனல் அரசு.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு அறிவிப்புகள் விரைவில் வரவுள்ளன. 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











