Vadachennai 2 - வடசென்னை 2 வருமா வராதா?.. இசையமைப்பாளர் பகிர்ந்த சீக்ரெட்
சென்னை: Vadachennai 2 (வடசென்னை 2) வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியிருக்கிறார்.
பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவிடம் பாடம் படித்த வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் படத்திலேயே தான் எப்படிப்பட்ட இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். கமர்ஷியல் படமாக அது அமைந்தாலும் வடசென்னை குறித்தும், பைக் திருட்டு பற்றியும் டீட்டெயிலாகவே பேசியிருப்பார் வெற்றி.
ஆடுகளத்தில் அதகளம் : முதல் பட வெற்றிக்கு பிறகு இரண்டாவது படமாக ஆடுகளம் படத்தை இயக்கினார். இதிலும் தனுஷ் நடித்தார். ஆனால் சென்னையை கதைக்களமாக வைத்துக்கொள்ளாமல் மதுரையை தேர்ந்தெடுத்தனர். சேவல் சண்டை குறித்தும், அதனால் எழும் ஈகோ குறித்தும் நுட்பமாக பேசிய ஆடுகளம் படம் 5க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிக்கு என்று ரசிகர் கூட்டமும், எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்தது.

ரசிகர்களை மெர்சலாக்கிய வடசென்னை: ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து விசாரணை படத்தை இயக்கிவிட்டு மீண்டும் தனுஷுடன் இணைந்தார் வெற்றிமாறன். படத்துக்கு வடசென்னை என பெயர் வைக்கப்பட்டது. முதலில் அந்தக் கதை சிம்புவுக்குத்தான் சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தில் அவர் நடிக்காமல் போக உள்ளே வந்தார் தனுஷ். அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்திருந்த அந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.
விமர்சனத்தை சந்தித்த வடசென்னை: படத்தில் ஏகப்பட்ட கூஸ்பம்ப்ஸ் சீன்கள் இருந்ததாக ரசிகர்கள் சிலாகித்தனர். அதேசமயம் வடசென்னை மக்கள் குறித்து வெற்றிமாறன் தவறாக சித்தரித்துவிட்டதாக ஒரு சிலர் விமர்சனத்தையும் முன் வைத்தனர். இருப்பினும் பெரும்பாலானோரால் படம் கொண்டாடவேப்பட்டது. மேலும் வடசென்னை படத்தை முடிக்கும்போது அன்புவின் எழுச்சி விரைவில் என வடசென்னை 2க்கு லீடையும் கொடுத்திருந்தார் வெற்றிமாறன்.
வடசென்னை 2 எப்போது?: இதனால் வடசென்னை 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எக்கச்சக்கமாக இருக்கிறது. ஆனால் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெற்றிமாறன் வெளியிடவில்லை. ஒரு மேடையில் தனுஷேகூட வடசென்னை 2 எப்போது என கேட்க அதற்கும் தெளிவான பதிலை சொல்லவில்லை வெற்றிமாறன். இருப்பினும் வடசென்னை 2 படத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
ஆனால் வெற்றிமாறனோ விடுதலையின் முதல் பாகத்தை முடித்துவிட்டு விடுதலை 2வில் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். அதேசமயம் விடுதலை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றிமாறன் வடசென்னை 2 வாடிவாசலை முடித்துவிட்டு ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
சந்தோஷ் நாராயணன்: இந்நிலையில் வடசென்னை படத்துக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "வெற்றிமாறன் அமீரின் கதாப்பாத்திரத்தை மட்டும் வைத்தே 'ராஜன் வகையறா' என்ற திரைப்படத்தை 2 மணி நேரங்கள் உருவாக்கி தயாராக வைத்திருக்கிறார். அந்த திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட வேண்டும்" என்றார். இதனையடுத்து வெற்றிமாறன் வடசென்னை 2வை எடுப்பாரா இல்லை ராஜன் வகையறாவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கிடையே ராஜன் வகையறாவைத்தான் வெற்றிமாறன் வெப் சீரிஸாக எடுக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











