மீண்டும் இணைகிறதா எவர்க்ரீன் கூட்டணி.. சார்பட்டா 2வில் சந்தோஷ் நாராயணன்?
சென்னை: சார்பட்டா 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில் சந்தோஷ் நாராயணன் பதிவு செய்திருக்கும் ட்வீட் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.
பா.இரஞ்சித் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர். அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி என அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றவை. அவர் கடைசியாக இயக்கிய படம் நட்சத்திரம் நகர்கிறது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

மெகா ஹிட்டான சார்பட்டா பரம்பரை
நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு முன்னதாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். ஆர்யா, பசுபதி, துஷாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவானது. இதுவரை தமிழில் வந்த பாக்ஸிங் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு உருவாகியிருந்த சார்பட்டா பரம்பரை மெகா ஹிட்டானது. மேலும் பல விவாதங்களையும் அந்தப் படம் கிளப்பியது.

உருவாகிறது சார்பட்டா 2
இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. முதல் பாகம் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான எந்த ஹிண்ட்டும் கொடுக்காமல் இருந்தாலும் அதன் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தையும் பா.இரஞ்சித்தே இயக்கவிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது, யார் யார் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

சார்பட்டா பரம்பரை 2வில் சந்தோஷ் நாராயணன்?
சார்பட்டா பரம்பரை படத்தை பொறுத்தவரை இரஞ்சித்தின் மேக்கிங்கும், கூஸ்பம்ப்ஸ் சீன்களும் வெற்றிக்கு எப்படி உதவியதோ அதே அளவு சந்தோஷ் நாராயணனின் இசையும் உதவியது. படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் பெரும் அளவில் ஹிட்டாகின. இந்தச் சூழலில் சார்பட்டா பரம்பரை 2 குறித்த அறிவிப்பை ஆர்யா ட்வீட் செய்திருந்தார். அதனை ரீ ட்வீட் செய்த சந்தோஷ் நாராயணன், 'வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை' என குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இந்தப் படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் - பா.இரஞ்சித் மனக்கசப்பு
முன்னதாக, சந்தோஷ் நாராயணின் மகளான தீயும், பா.இரஞ்சித்திற்கு நெருக்கமானவருமான தெருக்குரல் அறிவும் இணைந்து எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடலை உருவாக்கினர். அந்தப் பாடலானது சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பாடப்பட்டது. ஆனால் அதற்கு தெருக்குரல் அறிவு அழைக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதேபோல் அந்தப் பாடல் தொடர்பான சில நிகழ்வுகளிலும் அறிவு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பா.இரஞ்சித் ட்வீட் செய்ய, சந்தோஷ் நாராயணன் அறிக்கை வெளியிட என தீக்கும், தெருக்குரல் அறிவுக்கும் இடையே உருவான மனக்கசப்பு பா.இரஞ்சித்திற்கும், சந்தோஷ் நாராயணனுக்குமானதாக மாறியது என பலர் கூறினர். இதனையடுத்து எப்போதும் பா.இரஞ்சித் படங்களில் பணியாற்றும் சந்தோஷ் நாராயணன் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் பணியாற்றவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக பலரும் பேசினர். இப்படிப்பட்ட சூழலில் சந்தோஷ் நாராயணன் இப்போது சார்பட்டா பரம்பரை 2 குறித்து ட்வீட் செய்திருப்பதால் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அந்த எவர் க்ரீன் கூட்டணி இணைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











