ஜெயராம் மகனை இயக்கும் சந்தோஷ் சிவன்
சென்னை: ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஜெயராமின் மகனை வைத்து படம் இயக்க உள்ளார்.
"மீன் குழம்பும் மண் பானையும்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயராமின் மகன் காளிதாஸ். அப்படம் தமிழில் கணிசமான வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து பூமரம் என்ற மலையாளப் படத்தில் காளிதாஸ் நடித்தார். இப்போது, பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒருபக்க காதல் கதை, பிரேமம் திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் ஒரு படம், பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

அதோடு காளிதாஸின் கைவசம் மிதுன் மானுவேல் தாமஸின் அர்ஜெண்டினா ஃபேன்ஸ் கட்டூர்கடவு, ஆஷிக் அபுவின் வைரஸ் ஆகீய படங்களும் உள்ளன. தமிழில் அறிமுகமான அவர், முழுநேர மலையாள நடிகராகிவிட்டார்.
இவர் அடுத்ததாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சௌபின் ஷாகிர், நெடுமுடி வேணு, அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20 ஆம் தேதி துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள சந்தோஷ் சிவன், கடைசியாக இனம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











