'இதைப் பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ?' பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் கேள்வி
சென்னை: இரண்டாம் குத்து படத்தின் டீசரை விளாசிய பாரதிராஜாவுக்கு, இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.
இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி உள்ளது. இதை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த போஸ்டரில் நடுவில் நாயகி உள்ளாடைகளுடன் நிற்க, ஒரு பக்கம் டேனியலும் மறுபக்கம் சந்தோஷும் அந்த இடத்தில் ஆள் உயர வாழைப்பழத்தை வைத்தப்படி போஸ் கொடுத்திருந்தனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இரட்டை அர்த்த வசனம்
இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி உள்ளது. இதில் அதிகமான இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் டீசர் நீள்கிறது. இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதற்கு இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார்.

பார்க்கவே கூசினேன்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?
கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?

கண்டிக்கிறேன்
இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள். எத்தனை கற்பழிப்புகள்? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

டிக் டிக் டிக் ஸ்டில்
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ளார். கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான டிக் டிக் டிக் பட ஸ்டில்லை பதிவிட்டு, 'இந்தப் படத்தை பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











