ஹீரோயினை திட்டி, நகைச்சுவை நடிகரை அறைந்தாரா பிரகாஷ் ராஜ்?
ஹைதராபாத்: தெலுங்கு நகைச்சுவை நடிகர் சப்தகிரியை தான் அறைந்ததாக வெளியான தகவல் குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் பற்றி மக்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசை ட்விட்டரில் நறுக் நறுக் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
த்ரிநாத ராவ் இயக்கத்தில் ராம் போத்தினேனி, அனுபமா பரமேஸ்வரன், பிரணிதா சுபாஷ் நடித்து வரும் ஹலோ குரு பிரேம கோசமே தெலுங்கு படத்தில் பிரகாஷ் ராஜும் உள்ளார்.

அறை
ரயில் நிலையம் போன்று செட் போட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்பொழுது நகைச்சுவை நடிகர் சப்தகிரியை பிரகாஷ் ராஜ் அறைந்துவிட்டார் என்ற தகவல் தீயாக பரவியது. பிரகாஷ் ராஜ் அறைந்ததை பார்த்து அங்கிருந்த சுமார் 100 ஜூனியர் ஆர்டிஸ்டுகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

பிரகாஷ்ராஜ்
சப்தகிரியை அறைந்தது குறித்து பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். நான் அவரை அறைந்ததாக பரவிய தகவலில் உண்மை இல்லை. நான் எதற்காக அவரை அறைய வேண்டும்?. அவர் வளர்ந்து வரும் நடிகர். சொல்லப் போனால் அவர் முதல் முறையாக படம் இயக்குவது குறித்து வாழ்த்தினேன். அவருடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் இன்னும் சில நாட்களில் நடிக்க உள்ளேன் என்றார்.

பார்க்கவில்லை
பிரகாஷ் ராஜ் சப்தகிரியை அறைந்தது உண்மையா, இல்லையா என்று இயக்குனர் த்ரிநாத ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ சம்பவம் நடந்ததாக கூறப்பட்டபோது நான் அந்த இடத்திலேயே இல்லை என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்துள்ளது என்று தெரிந்தால் அனைவரும் அதை பற்றியே பேசுவார்கள். அதனால் படத்திற்கு கெட்டப் பெயர் ஏற்படும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு அந்த சம்பவத்தை மூடி மறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அனுபமா பரமேஸ்வரன்
முன்னதாக பிரகாஷ் ராஜ் ஒழுங்காக வசனம் பேசாததால் அனுபமாவை திட்டியதாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகு அனுபமா தான் பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் போட்டு பிரச்சனை எதுவும் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











