சரண்யா பொன்வண்ணனின் மகளுக்கு ஏற்ற ஜோடிதான்.. மாப்பிள்ளையும் பெரிய கைதான்.. பின்னணி என்ன தெரியுமா?
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகைகளில் ஒருவர் சரண்யா. நடிகர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரையுமே மருத்துவர் ஆக்கியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க இரண்டாவது மகளான சாந்தினிக்கு சமீபத்தில்தான் ஊட்டியில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் சரண்யாவின் மருமகன் பற்றிய தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் சரண்யா. அந்தப் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அப்படி அவர் கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி, மனசுக்குள் மத்தாப்பு உள்ளிட்ட படங்களில் லீடு ரோலில் நடித்தார். அவர் நடித்த படங்களும் அவருக்கு நல்ல வெளிச்சத்தையே பெற்றுக்கொடுத்ததால் கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திருமணம் செய்துகொண்ட சரண்யா: ஆனால் அவர் தனது மார்க்கெட் வேல்யூ அதிகமாக இருக்கும்போதே இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணனை கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். குழந்தை, குடும்பம் என்று ஆகிவிட்டதால் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்த சரண்யா பொறுப்புள்ள குடும்ப தலைவியாக வீட்டையும், குழந்தைகளையும் கவனிப்பவராக மாறினார்.

சினிமாவில் ரீ என்ட்ரி: குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்த அவருக்கு; அமீர் இயக்கிய ராம் படம் தரமான கம்பேக்காக அமைந்தது. அப்போதிருந்து இப்போதுவரை கோலிவுட்டில் தவிர்க்க முடியாத குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டுமா? கூப்பிடுங்கள் சரண்யா பொன்வண்ணனை என்ற நிலைமைதான் இருக்கிறார். ரஜினி, கமல் தவிர்த்து பெரும்பாலான ஹீரோக்களுக்கு அவர் அம்மாவாக நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளுக்கு நிச்சயதார்த்தம்: தன்னுடைய மகள்களுக்கு திரைத்துறையில் விருப்பம் இல்லாததால் அவர்கள் விரும்பிய மருத்துவத்தையே படிக்க வைத்தது இந்த சூப்பர் தம்பதி. அதன்படி மூத்த மகள் பிரியதர்ஷினியும், இளைய மகள் சாந்தினியும் இப்போது பெரிய மருத்துவர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இளைய மகள் சாந்தினிக்கு சமீபத்தில் டான் பிலிப் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துவைத்தார்கள். இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
மாப்பிள்ளையின் பின்னணி: இந்த நிச்சயதார்த்தம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரமாண்டமாக செட் போட்டு நடத்தப்பட்டது. சாந்தினியின் வருங்கால கணவர் டான் பிலிப் நீலகிரியை சேர்ந்தவர் என்றும் அதனால்தான் இந்த நிச்சயதார்த்தம் அங்கு நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சரண்யாவின் மகள் சாந்தினியை போன்றே வரப்போகும் மருமகன் டான் பிலிப்பும் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிலிப்பின் குடும்பம் பொருளாதார ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் பெரிய இடம்தான் என்றும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஒரே துறையை சேர்ந்தவர் தனது மகளுக்கு வாழ்க்கை துணையாக வந்திருப்பதை நினைத்தும், டானின் குணங்களை நினைத்தும் சரண்யாவும், பொன்வண்ணனும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











